7 மீனவர்களுடன் சென்றபோது உவரி தூண்டில் வளைவில் தரை தட்டிய விசைப்படகு மீட்பு


7 மீனவர்களுடன் சென்றபோது உவரி தூண்டில் வளைவில் தரை தட்டிய விசைப்படகு மீட்பு
x

தூத்துக்குடியில் இருந்து 7 மீனவர்களுடன் சென்ற விசைப்படகு உவரி கடலில் உள்ள தூண்டில் வளைவில் தரை தட்டியது. அது மற்றொரு படகு மூலம் மீட்கப்பட்டது.

திருநெல்வேலி

திசையன்விளை:

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்தவர் பாஸ்கர் சார்லஸ். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 1-ந் தேதி 7 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கடலில் தங்கி மீன்களை பிடித்துவிட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். நேற்று முன்தினம் மாலையில் அவர்கள் பிடித்த மீன்களை பதப்படுத்த தேவையான ஐஸ்கட்டிகள் இல்லாததாலும், தேவையான உணவு பொருட்களை வாங்குவதற்காகவும் நெல்லை மாவட்டம் உவரி கடலில் தூண்டி வளைவு அருகில் வந்து கொண்டு இருந்தனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக கடலில் ஆழம் குறைவான பகுதியில் விசைப்படகு தரைதட்டி மேற்கொண்டு நகர முடியாமல் நின்றது. இதனால் மீனவர்கள் தவித்தனர். அதில் இருந்த மீனவர்கள் சக மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக உவரி மீனவர்கள் நாட்டுப்படகு மூலம் விசைப்படகை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து மற்றொரு விைசப்படகு நேற்று வரவழைக்கப்பட்டது. அதன் உதவியுடன் தரைதட்டி நின்ற விசைப்படகு மாலையில் மீட்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றனர்.


Next Story