கண்மாயில் கிடந்த 6 சாமி சிலைகள் மீட்பு
திருச்சுழி அருகே விடத்தக்குளம் கண்மாயில் கிடந்த 6 சாமி சிலைகள் மீட்கப்பட்டது.
காரியாபட்டி,
திருச்சுழி அருகே விடத்தக்குளம் கண்மாயில் கிடந்த 6 சாமி சிலைகள் மீட்கப்பட்டது.
கற்சிலைகள்
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே விடத்தக்குளம் கண்மாயில் நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது காலில் ஏதோ தட்டுப்படுவதை உணர்ந்து அதை எடுத்து பார்த்தனர். அப்போது அங்கு சிதைந்த நிலையில் தண்ணீருக்குள் 6 சிலைகள் கிடந்துள்ளது.
இதுகுறித்து உடனடியாக அந்த சிறுவர்கள் இதுகுறித்து ஊர் பெரியவர்களிடம் கூறினர். உடனடியாக கிராம மக்கள் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். கிராம நிர்வாக அதிகாரி விடத்தக்குளம் கண்மாய் பகுதிக்கு சென்று பார்வையிட்டார். மேலும் அங்கு தண்ணீருக்குள் கிடந்த சிலைகள் மீட்கப்பட்டது.
மீட்பு
இதில் 3 அடி உயரத்தில் தலை இல்லாத அம்மன் சிலையும், கருப்பசாமி, அம்மன் சிலையும், ஒரு அடியில் 3 நாகர் சிலையும் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலைகளை திருச்சுழி தாசில்தார் சிவக்குமார் மீட்டு விருதுநகர் அரசு அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைத்தார்.
விடத்தக்குளம் கண்மாய் தண்ணீருக்குள் கிடந்த சாமி சிலைகளை மீட்டதை கண்டு பொதுமக்கள் வியப்புடன் பார்த்துவிட்டு சென்றனர்.