பெருமாள் மலையில் 2 பெண்கள் பிணமாக மீட்பு


பெருமாள் மலையில் 2 பெண்கள் பிணமாக மீட்பு
x

துறையூர் அருகே பெருமாள் மலையில் 2 பெண்கள் பிணமாக மீட்கப்பட்டனர். இவர்கள் கொலை செய்யப்பட்டனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி

அழுகிய நிலையில் பிணம்

திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் மலையில் உள்ள பாலத்தின் அடியில் 2 பெண்கள் பிணமாக கிடப்பதாக துறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது, பாலத்தின் கீழே புதர்களுக்கு மத்தியில் 50 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் உடல் அழுகிய நிலையில் கிடந்தனர். மேலும் அருகே ஒரு பையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வங்கி பாஸ்புக் உள்ளிட்டவை கிடந்தன.

இதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், துறையூரை அடுத்த பகளவாடி கிழக்கு தெருவை சேர்ந்த சம்பூர்ணம் என்பதும், இவருக்கு தனலட்சுமி, காவியா என 2 மகள்களும், விஜய் என்ற ஒரு மகனும் உள்ளார் எனவும், கணவர் கிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டார் எனவும் தெரிய வந்தது.

பிரேத பரிசோதனை

சம்பூர்ணத்துடன் இறந்து கிடந்த மற்றொரு பெண் அதே ஊரை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி பெரியம்மா என்பதும், இவர்கள் 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்றும் தெரியவந்தது. மேலும் அவர்களது முகம் மற்றும் உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் கிடந்தது.

இதையடுத்து அவர்களது உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர்கள் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது இவர்களை யாரேனும் கொலை செய்து இங்கு பிணத்தை வீசி சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருமாள் மலையில் 2 பெண்கள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story