அழிவின் பிடியில் கற்பகதரு: பனை மரங்களை பாதுகாத்தால் தமிழகம் பொருளாதாரத்தில் முதன்மை இடத்துக்கு வரும்- மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யலாம்


அழிவின் பிடியில் இருக்கும் கற்பகதருவான பனை மரங்களை காப்பாற்றி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்வதன் மூலம் தமிழகம் பொருளாதாரத்தில் முதன்மை நிலையை அடையலாம் என்று விவசாயிகள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

ஈரோடு

அழிவின் பிடியில் இருக்கும் கற்பகதருவான பனை மரங்களை காப்பாற்றி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்வதன் மூலம் தமிழகம் பொருளாதாரத்தில் முதன்மை நிலையை அடையலாம் என்று விவசாயிகள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

கற்பகத்தரு

தமிழ்நாட்டின் மாநில மரம் என்ற அந்தஸ்தை பெற்றது பனை மரம். சுமார் 30 அடி உயரம் வளைவு நெளிவு இல்லாமல் ஓங்கி உயர்ந்து வளர்ந்து நிற்கும் பனை மரங்கள் குறித்து தமிழ் இலக்கியங்கள் போற்றிப்பாடுகிறது. புராணங்களில் பனை மரத்துக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. பனை மரத்தை காளியின் மறுரூபமாகவும், பதனீர், காளியம்மன் தன் குழந்தைகளுக்கு அளிக்கும் பால் என்றும் புராணக்கதை கூறுகிறது.

காளியம்மன் புதல்வர்கள் மட்டுமே பனை மரத்தில் இருந்து சரியாக பதனீர் இறக்க முடியும் என்றும் அவர்கள் மூலமாகவே பனை மரம் அமிர்தமாம் பதனீரை தரும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் உண்டு.

பனை என்பது மரம் என்றே தமிழிலக்கியங்கள் கூறுகின்றன. நாமும் மரம் என்றே அதை அழைக்கிறோம். ஆனால், அறிவியல் பனையை தாவரம் என்றும் புல் இனம் என்றும் கூறுகிறது. பாரசசு என்கிற தாவர பேரினத்தை சார்ந்ததாக பனைமரம் கூறப்படுகிறது. தொல்காப்பியம் மரம் மற்றும் புல் குறித்து கூறும் இலக்கண வகைப்படி பனைமரம் புல் இனத்தை சேர்ந்தது.

பயன்கள்

பனை மரத்தைப்பற்றி நமது முந்தைய தலைமுறையினரை கேட்டால் நிறுத்தாமல்பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தமிழர்களின் வாழ்வோடும், தமிழர்களின் கலாசாரத்தோடும், பண்பாட்டோடும் முழுமையாக கலந்தது பனை மரம். கட்டில், பாய், குழந்தைகளை உறங்க வைக்கும் தடுக்கு என்கிற சிறிய வகை பாய், பெட்டி, கடவம் எனப்படும் பெரிய வகை பெட்டிகள், நார் பெட்டி, கூடை, சுளகு (முறம்) என்று வீட்டில் பயன்படுத்தும் அனைத்து வகை பொருட்களும் ஒரு காலத்தில் பனைமரத்தில் இருந்து கிடைத்த பொருட்களால் ஆனதாகவே இருக்கும்.

பனை மரத்தடிகளால் வீடுகளுக்கு தூண் அமைப்பது. ஓடு வேய உத்தரம் அமைப்பது. குடிசைகள் கட்ட பனை ஓலை வேய்வது என்று பனையின் வேர் முதல் தலை (ஓலை) வரை அனைத்தும் மக்களுக்கு பயன்பட்டு வந்தது. நுங்கு, பனம்பழம், தவுண் (பனங்கொட்டை முளைக்கும் பருவம்), பனங்கிழங்கு என்று பனையில் இருந்து கிடைக்கும் உணவுகள் பல. பதனீர், கள் போன்றவை அனைவருக்கும் தெரிந்த பானங்கள்.

வகைகள்

பனை என்றால் பொதுவாக அனைவரும் பதனீர் தரும் அதுதானே, நுங்கு தரும் அதுதானே என்று சாதாரணமாக கேட்டுவிடுவார்கள். பனையில் பல்வேறு இனங்கள் உள்ளன. உலக அளவில் ஆப்பிரிக்க, ஆசிய வகை என்று இருந்தாலும், ரகம் வாரியாக ஆண் பனை, பெண் பனை, கூந்தப்பனை, தாளிப்பனை, குமுதிப்பனை, சாற்றுப்பனை, ஈச்சம்பனை, ஈழப்பனை, சீமைப்பனை, ஆதம்பனை, திப்பிலிபனை, உடலற்பனை, கிச்சிலிப்பனை, குடைபப்னை, இளம்பனை, கூறைப்பனை, இடுக்குப்பனை, தாதம்பனை, ஈரம்பனை, சீனப்பனை, குண்டுப்பனை, அலாம்பனை, கொண்டைப்பனை, ஊரிலைப்பனை, ஏசறுபனை, காட்டுப்பனை, கதலிப்பனை, வலியப்பனை, வாதப்பனை, அலகுப்பனை, நிலப்பனை, சனம் பனை என்று 34 ரகங்களில் பனைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

வழக்கமாக நாம் பார்க்கும் பனைகள் ஆண் -பெண் பனைகளாகும். ஆண் பனை அலகுப்பனை என்றும் பெண்பனை பருவப்பனை என்றும் அழைக்கப்படுகிறது. பெண் பனையில் நுங்கு கிடைக்கும். ஆண் பனையில் இருந்து பதனீர் கிடைக்கும். நுங்கு பாளை வெளிவரும்போது அதில் இருந்து பதனீர் எடுக்க முடியும். ஆனால், நுங்கு கிடைக்காது. ஆண்பனை பூக்கும், காய்க்காது. அந்த பூ பாளையை அறுத்து பதனீர் எடுக்கப்படுகிறது. பெண் பனை காய்க்கும். அதில் இருந்துதான் அடுத்த தலைமுறைக்கான விதைகள் கிடைக்கிறது. எனவே ஆண் பனைகளை காயாப்பனைகள் என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சிறப்பு

பனையின் சிறப்பு, அதை நாம் பயன்படுத்துவதில்தான் இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்புவரை பனை ஓலையில் செய்த தோண்டி எனப்படும் சிறு கூடை போன்ற பொருளில் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கும் வழக்கம் இருந்தது. கஞ்சி குடிப்பவர்கள் பனை ஓலையில் சிறிய கோப்பையை செய்து அதில் குடிப்பார்கள். தற்போது பனை பதனீர் விற்பவர்கள் அதுபோன்று செய்து கொடுப்பதை பார்க்கலாம். இவ்வாறு மக்களின் வாழ்வோடு கலந்திருந்த பனை மரங்களின் இன்றைய நிலை என்ன?. ஏன் பனை மரங்களில் கிடைக்கும் உணவுகள் நமக்கு சரியாக கிடைக்கவில்லை?. பனை மரங்கள் குறித்த விவரங்கள் பொதுமக்களுக்கு தெரியுமா?.

பெயர் தெரிவிக்க விரும்பாத ஈரோட்டை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கூறும்போது, 'பனை மரமா?. ரொம்ப உயரமா இருக்கும் அதுதானே... அதில் என்ன விஷேசம் இருக்கு... நான் ரோட்டோரம், வயல் ஓரங்களில் பார்த்து இருக்கிறேன். அதில் எப்படி ஏற முடியும். அதில் இருந்து பதனீர் கிடைக்கிறது என்று ஒரு முறை சாலையோரத்தில் இருந்து எனது அப்பா வாங்கிக்கொடுத்தார். என்னால் குடிக்க முடியவில்லை. ஆனால் அதில் உடலுக்கு தேவையான சத்துகள் இருக்கின்றன என்று கூறி கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தார். இப்போது நான் அந்தப்பக்கம் போவதே இல்லை' என்றார். கடந்த கால தலைமுறையினருக்கு இனித்துக்கிடந்த பதனீர் இளைய தலைமுறையினர் பலருக்கும் கசந்துபோய் இருப்பது, பனைமரங்கள் குறித்து நாம் சரியாக கொண்டு சேர்க்காததே காரணம்.

5 கோடி மரங்கள்

தமிழ்நாட்டில் பனையில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக போராடி வரும் விவசாயி செ.நல்லசாமி கூறியதாவது:-

பனை மரம் என்பது தமிழ் மக்களின் அடையாளம். இந்திய சுதந்திரத்துக்கு முன்பு தமிழ்நாட்டில் 50 கோடி பனை மரங்கள் இருந்ததாக ஆங்கிலேயரின் குறிப்பேட்டில் உள்ளது. தற்போது ஒட்டு மொத்த இந்தியாவிலும் சேர்த்து வெறும் 8 கோடி மரங்கள் உள்ளன. இதில் 5 கோடி மரங்கள் தமிழ்நாட்டில் உள்ளன என்பது சற்று ஆறுதல்.

முன்காலத்தில் பனை மரம், பனை ஓலைகள் கொண்டு வீடுகள் கட்டப்பட்டன. காங்கிரீட் கட்டிடங்கள் இந்த நிலையை மாற்றிவிட்டன. பெட்டிகள், கூடைகளின் இடத்தை பாலித்தீன், பிளாஸ்டிக் ஆகியவை இடத்தை பிடித்து விட்டன. அப்போதெல்லாம் இனிப்பு என்றால் கருப்பட்டிதான். வெள்ளை சீனி அந்த இடத்தை பிடித்து விட்டது. சர்க்கரை ஆலைகள் இனிப்பு தேவையை பூர்த்தி செய்வதால் கருப்பட்டி தேவையற்று போய்விட்டது.

தலைகீழ்

இதனால் களைச்செடியாக பயன் இல்லாததாக பனை மரம் ரூ.50-க்கும் ரூ.100-க்கும் செங்கல் சூளைகள், சுண்ணாம்பு சூளைகளில் விறகாக விற்கப்பட்டன. 1962-ம் ஆண்டு எனது சொந்த ஊரான அறச்சலூரில் முதன் முதலாக டீக்கடை திறக்கப்பட்டது. அப்போது கருப்பட்டி டீ 3 பைசாவுக்கும், வெள்ளை சர்க்கரை டீ 5 பைசாவுக்கும் விற்கப்பட்டது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. ஒரு கிலோ சீனி ரூ.40-க்கு கிடைக்கிறது. ஒரு கிலோ கருப்பட்டி ரூ.350-க்கும் மேல் இருக்கிறது. வெண் சர்க்கரை அதாவது சீனி நுகர்வுதான் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு காரணம் என்பதால் ஏராளமானவர்கள் கருப்பட்டி சாப்பிட தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், கலப்படம் என்ற பிரச்சினையால் உண்மையான பனை கருப்பட்டி (வெல்லம்) கிடைப்பதில் சிக்கல் உள்ளது.

முதன்மை மாநிலம்

உலகிலேயே பனை நீரா இறக்குவதற்கு தமிழ்நாட்டில் மட்டும்தான் தடை உள்ளது. தடையை நீக்கி, சிரமத்துக்கு உரிய நிபந்தனைகள் ஏதும் இன்றி நீரா இறக்கவும், அதை அரசே கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்யவும் வேண்டும். தமிழக அரசு பனை மரங்களை மட்டும் பாதுகாத்து, அதில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்தால் விரைவிலேயே பொருளாதாரத்தில் முதன்மை மாநிலமாகும்.

தாய்ப்பாலின் குணம் கொண்ட கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். பனை தொழிலாளர் நல வாரியத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். பனை மரத்தை உடனடியாக உருவாக்க முடியாது. ஒரு பனை மரம் பருவத்துக்கு வர வேண்டும் என்றால் 14 ஆண்டுகள் ஆகும். பெண்ணும், பனை மரமும் ஒன்று. எனவே இப்போதே எதிர்காலத்தை நோக்கிய சிந்தனையுடன் பனை மரங்கள் பெருக்கப்பட வேண்டும். பனைமரம் வான் மழையை மட்டுமே நம்பி வளரும், பூக்கும், காய்க்கும். பலன் தரும். ஆனால், கரும்பு 10 மாதங்கள் முழுமையாக தண்ணீர் குடித்து சர்க்கரை தருகிறது. பனை மரங்கள் மட்டும் அதிக அளவில் வளர்த்தால், இனிப்பு தேவைக்காக அதிக தண்ணீரை நாம் செலவிட வேண்டியது இருக்காது என்பதை உறுதியாகும்.

இன்று தமிழ் தமிழ் என்கிறோம். நமது தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் ஓலைச்சுவடிகளாக பாதுகாத்து நமக்கு கொடுத்தவை பனை ஓலைகள் என்பதை உணர்ந்து இந்த தருணத்தில் செயலாற்ற வேண்டும்.

இவ்வாறு விவசாயி செ.நல்லசாமி கூறினார்.

பனை மரங்கள் குறித்த விவரங்கள் பெருமைக்கு உரியதாக இருக்கிறது. சேர மன்னர்கள் பனை மடலால் செய்த பூவை அணிந்திருந்தனர். எனவே பனை மடல் பூ சேரர்களின் குடி பூவாக திகழ்ந்தது. அரச அரியணையில் வீற்றிருந்த பனைமரம் இன்று செங்கல் சூளைகளுக்கு செல்வதை அனுமதிக்கலாமா... பாதிப்பு இல்லாத உணவுகளை அளிக்கும் தாயாக விளங்கும் பனை மரத்தை பாதுகாப்போம்.


Next Story