தென்காசியை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்த கோரிக்கை
தென்காசியை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என நகர்மன்ற தலைவர் சாதிர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் உள்ளாட்சித்துறை அமைச்சர் மற்றும் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
தென்காசி நகராட்சி தற்போது 85 ஆயிரம் மக்கள்தொகைக்கும் அதிகமாக உள்ளது. தென்காசி மாவட்ட தலைநகரமாக இருப்பதாலும் தென்னகத்தின் சிறந்த சுற்றுலா தலமான குற்றாலம் அருகில் இருப்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே முதல்நிலை நகராட்சியாக உள்ள தென்காசியை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்திட வேண்டும்.
மேலும் தென்காசி பகுதி முழுவதும் மலையிட பாதுகாப்பு குழும பகுதியில் இருப்பதால் கட்டிடங்கள் கட்ட அனுமதி பெறுவதற்கும், மனைப்பிரிவு அனுமதி மற்றும் தனிமனை வரன்முறை அனுமதி பெறுவதற்கும், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே மலையிட பாதுகாப்பு குழும பகுதியில் இருந்து தென்காசி நகரில் உள்ள அனைத்து பகுதிகளையும் நீக்குவதற்கு ஏற்கனவே பரிந்துரை செய்து நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை விரைந்து நீக்க வேண்டும்.
தென்காசி நகரில் தென்காசி தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் (பேஸ்-2) ஏற்கனவே அறிவித்தபடி அதனை விரைந்து செயல்படுத்த வேண்டும். தென்காசி நகரில் சாலை பராமரிப்பு பணி, கழிவுநீர் ஓடை பராமரிப்பு பணிகளுக்கு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இங்குள்ள தினசரி சந்தையில் தினமும் வெளியூர்களில் இருந்து வந்து பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். மக்கள் நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் புதிதாக தினசரி சந்தையை நிறுவவும் பழைய பஸ் நிலையத்தில் வணிக பயன்பாட்டு கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யவும் வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தென்காசி நகர்மன்ற துணை தலைவர் கே.என்.எல்.சுப்பையா உடன் இருந்தார்.