தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை


தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை

தேசிய நெடுஞ்சாலை

புதுக்கோட்டை வழியாக திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்களும் இந்த வழியாக அதிகம் இயக்கப்படுகிறது. இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாக உள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை வழியாக செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. இதில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நகரின் ஊருக்குள் செல்லக்கூடிய பிரிவு சாலைகளில் தான் அதிகம் விபத்து உண்டாகிறது.

இந்த சாலையில் வாகனங்கள் வேகமாக செல்லும் போது பிரிவு சாலையில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியாதது, விபத்து தடுப்பு நடவடிக்கைகள் இல்லாததால் ஊருக்குள் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் இணையும் பகுதியில் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:-

போக்குவரத்து சிக்னல் விளக்குகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க மாவட்ட தலைவர் மோகன்:- திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து குளத்தூர் பிரிவு சாலை, புதுக்கோட்டை கருவேப்பிலான் ரெயில்வே கேட், கட்டியாவயல், ஆறாங்கல், திருமயம் பிரிவு சாலைகளில் விபத்து அதிகம் ஏற்படுகிறது. ஆறாங்கல் பிரிவு சாலையில் இரவில் உயர் மின் கோபுர விளக்குகள் எரிவதில்லை. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாகனங்கள் மோதி விபத்து உண்டானது. புதுக்கோட்டை நகரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை கருவேப்பிலான் ரெயில்வே கேட் பிரிவு சாலையில் இருசக்கர வாகனங்கள், கார்களில் செல்லும் போது எதிரே வரும் வாகனங்கள் நேராக தேசிய நெடுஞ்சாலையில் செல்கிறதா? புதுக்கோட்டை நகருக்குள் வருகிறதா? என்பதை கணிப்பதில் குழப்பம் ஏற்படும். இதேபோல் சாலையில் வாகனங்கள் வேகமாக செல்லும் போது பிரிவு சாலையில் இருந்து வாகனங்கள் செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் உயர்கோபுர மின் விளக்குகள் சரியாக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து சிக்னல் விளக்குகளும் சரியான முறையில் எரிய வேண்டும். மேலும் இரும்பு தடுப்புகள் அமைப்பதினாலும் சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. இதற்கு பதிலாக மாற்று நடவடிக்கைகளை போலீசார், அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

கால்நடைகள்

கார் டிரைவர் ரெத்தினம்:- இரவில் மின் விளக்குகள் எரியாத இடத்தில் சாலையில் வாகனங்கள் செல்லும் போது எதிரே வரும் வாகனங்களும் முகப்பு விளக்குகள் எரியும் போது பிரிவு சாலையில் இருந்து ஆட்கள் யாரும் நடந்து வந்தாலோ அல்லது கால்நடைகள் எதுவும் நின்றாலோ டிரைவர்களுக்கு வண்டி ஓட்டும் போது தெரிவது சற்று கடினம். இதனால் தான் அடிக்கடி மோதி விபத்து ஏற்படுகிறது. இதில் லேணா விளக்கு, ஆறாங்கல் பிரிவு சாலையில் தான் அதிகம் விபத்து ஏற்படுகிறது. இதனால் உயர் கோபுர மின் விளக்குகள் சரியாக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவில் ஒளிரும் வில்லைகளை பிரிவு சாலைகளை குறிக்கும் வகையில் அதிகம் ஒட்ட வேண்டும்.

உயர் கோபுர மின் விளக்குகள்

திருமயம் பகுதியை சேர்ந்த செல்வேந்திரன்:- திருமயம் பகுதியில் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தஞ்சை- மதுரை தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது. இந்த சாலையில் திருமயத்திற்குள் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் இணையும் சாலையாகவும், தேசிய நெடுஞ்சாலை கடக்கும் பகுதியாகவும் உள்ளது. இந்த நான்கு பகுதியில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பிரிவு சாலையில் இரவு நேரங்களில் வானங்கள் ஓட்டுவதற்கு சிரமமாக இல்லாமல் இருந்து வருகிறது. அதே சமயம் சில நேரங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் எரியாமல் இருந்து விடுகிறது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு சிரமாக உள்ளது. உயர் கோபுர மின் விளக்கை பழுதடைய விடாமல் அடிக்கடி பராமரிப்பு செய்து தங்கு தடையின்றி மின் விளக்கை எரிய செய்து விபத்தை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story