தா.பழூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை


தா.பழூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை
x

தா.பழூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

அரியலூர்

தா.பழூர் ஊராட்சி ஒன்றியம்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றியம் 33 ஊராட்சிகளை உள்ளடக்கியது. தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தின் ஒரு பகுதி காவிரி டெல்டா பாசன விவசாயம் செய்யும் பசுமையான பகுதியாகவும், ஒரு பகுதி மானாவாரி பயிர்கள் செய்ய ஏதுவான மணல் பாங்கான நிலப்பரப்பாகவும், மற்றொரு பகுதி செம்மண் பூமியாக உள்ள முந்திரி காடுகள் அமைந்த பகுதியாகவும், சில பகுதிகள் கரிசல் மண், களிமண் கலந்த விவசாய பூமியாகவும் அமைந்துள்ளது.

தா.பழூர் ஊராட்சி ஒன்றியம் ஒட்டுமொத்தமாக விவசாயத்தை நம்பியே இருக்கக்கூடிய பகுதியாக அமைந்துள்ளது. இங்கு அதிகளவில் விவசாய கூலி தொழிலாளர்கள், குடிசை வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகளில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

தீ விபத்து

தா.பழூர் ஒன்றியத்தில் வீடுகள், விவசாய நிலங்கள், வணிக நிறுவனங்களில் ஆண்டுக்கு 100 முதல் 150 சிறிய அளவிலான தீ விபத்துகள் முதல் பெரிய அளவிலான விபத்துகள் ஏற்படுகிறது. தா.பழூர் தாலுகாவில் தீயணைப்பு மீட்பு படையினரின் தேவைகள் இருக்கும் சமயங்களில் ஜெயங்கொண்டம், அரியலூர் மற்றும் மிக அத்தியாவசிய தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த கும்பகோணம் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடங்களுக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

ஜெயங்கொண்டம், அரியலூர், கும்பகோணம் ஆகிய நகரங்களில் இருந்து தா.பழூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தீயணைப்பு மீட்பு படையினரின் வாகனங்கள் வந்து சேர்வதற்கு முன்பாக அதிகளவில் தீ பரவி பெரிய அளவு சேதத்தை ஏற்படுத்துகிறது.

தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை

தா.பழூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய ஒன்றியங்களுக்கு ஜெயங்கொண்டம் நகரில் மட்டுமே தீயணைப்பு நிலையம் அமைந்துள்ளது. 3 ஒன்றியங்களில் உள்ள 98 ஊராட்சி மன்றங்களுக்குட்பட்ட சுமார் 220 குக்கிராமங்களில் எங்கு தீ விபத்து நடந்தாலும் ஜெயங்கொண்டத்தில் இருந்து மட்டுமே தீயணைப்பு வீரர்கள் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் நீண்ட தூர பயணம் செய்த பிறகே சம்பவ இடத்தை தீயணைப்பு மீட்புப்படையினரால் அடைய முடிகிறது.

எனவே தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு தீயணைப்பு நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.


Next Story