குடிநீர் வசதி செய்து தர கோரிக்கை
திருச்சுழி பஸ் நிறுத்தத்தில் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சுழி,
திருச்சுழி பஸ் நிறுத்தத்தில் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய சந்திப்பு
திருச்சுழியில் தாலுகா அலுவலகம், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அரசு பள்ளிகள், வேளாண் அலுவலகம், போலீஸ்நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. மேலும் திருச்சுழி சுற்றுலா தலமாகவும் உள்ளது.
இந்த ஊரை சுற்றி 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு பணி நிமித்தம் காரணமாக தினசரி திருச்சுழிக்கு வந்து செல்கின்றனர். இதுதவிர திருச்சுழி முக்கிய சந்திப்பு பகுதியாக உள்ளது. ஆதலால் இந்த பகுதியில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றன.
குடிநீர் வசதி
ராமேசுவரம், ராமநாதபுரம், சிவகங்கை, பரமக்குடி, மானாமதுரை, பார்த்திபனூர், கமுதி, அபிராமம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பிரதான சாலையாக திருச்சுழி சாலை உள்ளது.
காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பஸ் நிறுத்தத்திற்கு வந்து செல்கின்றனர். இவர்கள் பஸ்சிற்காக நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இந்தநிலையில், பஸ் நிறுத்தத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு பஸ் நிறுத்தத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்திதர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.