அரியலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரிக்கை


அரியலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரிக்கை
x

அரியலூர் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று தமிழர் நீதி கட்சி ஏர் உழவர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட தமிழர் நீதி கட்சி ஏர் உழவர் சங்கம் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம், மே தொழிலாளர் தின விழா ஒற்றுமை திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாக்யராசு தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் மதியழகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழர் நீதி கட்சி ஏர் உழவர் சங்க நிறுவனர் தலைவர் சுபா இளவரசன் பேசும்போது கூறியதாவது:- அரியலூர் மாவட்டம் முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் சிமெண்டு ஆலை நிர்வாகம் சார்பில் ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட பொன்னேரி உள்ளிட்ட ஏரிகள் அனைத்தையும் தூர்வாரி வெட்டி முடிக்கப்பட்ட சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை நிரப்ப வேண்டும்.

மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். அரியலூர் மாவட்ட மக்களுக்கு வீடு கட்டுவதற்கு தேவையான சிமெண்டுகளை உற்பத்தி விலைக்கே வழங்க வேண்டும். சிமெண்டு ஆலைகளால் ஏற்படும் மாசால் பொதுமக்களுக்கு ஏற்படும் நோய்கள் அனைத்திற்கும் மருத்துவ செலவுகளை சிமெண்டு ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும். அரியலூர் மனகெதி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும். அரியலூர் மாவட்டத்திற்கு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு முந்திரி தொழிற்சாலை அமைக்க வேண்டும். சோழர் பெருமையை தாங்கி நின்ற அரியலூர் மாவட்டத்தில் ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் ஆதாரத்தைப் பெருக்கி வேளாண்மையை காத்திட வேண்டும். நீர் மேலாண்மை பெருக்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, மாநில மகளிர் அணி தலைவர் கவியரசி பேசுகையில், பெண்கள் தாங்கள் சந்தித்து வரும் இன்னல்களுக்கு எதிராக போராட முன்வர வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரியலூர் ஒன்றிய செயலாளர் பாலையா நன்றி கூறினார்.


Next Story