அரசு கொள்முதல் நிலையத்தில் சன்னரக சீரக நெல்லை வாங்க கோரிக்கை
அரசு கொள்முதல் நிலையத்தில் சன்னரக சீரக நெல்லை வாங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உப்பிலியபுரத்தை அடுத்த வைரிசெட்டிப்பாளையம், கோட்டப்பாளையம், பி.மேட்டூர், ஆலத்துடையான்பட்டி, பச்சபெருமாள்பட்டி, எரகுடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சன்ன ரக நெல் வகைகளான நாட்டு சீரகம், பருதுவான் நெல் வகைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் உப்பிலியபுரத்தை அடுத்த தளுகை ஊராட்சி டி.பாதர்பேட்டையில் கடந்த மாதம் 5-ந்தேதி அரசு நெல் கொள்முதல் மையம் தொடங்கப்பட்டது. கடந்த 50 நாட்களில் 2 டன் மட்டுமே மோட்டா ரக நெல் கொள்முதல் செய்யப்பட்டு ஒரு லோடு மட்டும் அனுப்பப்பட்டுள்ளது. தொடர் மழை, கடும் பனிப்பொழிவு காரணமாக மகசூல் குறைந்துள்ளது. இந்த நிலையில் சீரக சன்ன ரக நெல்வகைகள் அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படவில்லை என தெரிகிறது. எனவே சீரக சன்ன ரக நெல்வகைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.