பொதுப்பணித்துறை அலுவலக மராமத்து பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை


பொதுப்பணித்துறை அலுவலக மராமத்து பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
x

குளித்தலையில் ஆமை வேகத்தில் நடைபெறும் பொதுப்பணித்துறை அலுவலக மராமத்து பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

பொதுப்பணித்துறை அலுவலகம்

கரூர் மாவட்டம், குளித்தலையில் வட்டாட்சியர், கோட்டாட்சியர், பொதுப்பணித்துறை, கருவூலம் போன்ற அரசு அலுவலக கட்டிடங்கள், கிளை சிறைச்சாலை ஆகியவை ஒரே வளாகத்திற்குள் உள்ளது. இதில் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் பொதுப்பணித்துறையின் கட்டிட கட்டுமான மற்றும் பராமரிப்பு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் ஆகிய 3 தாலுகா (வட்ட) உள்ளடக்கிய பகுதிகளில் அரசு சார்பில் ஏதேனும் அரசு அலுவலக கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்றால் அந்த கட்டிட கட்டுமான பணிகள் இந்த பொதுப்பணித்துறை அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுபோல ஏற்கனவே கட்டப்பட்டு பழுதடைந்த அரசு கட்டிடங்களில் மராமத்து பணிகள் செய்ய வேண்டும் என்றாலும் அந்தபணியையும் இந்த அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

பணி முடிக்கப்படவில்லை

இந்தநிலையில் இந்தப் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலக கட்டிடத்தின் கான்கிரீட்டாலான மேற்கூரை சேதமடைந்த காரணத்தால் மழைக்காலங்களில் மேல்கூரையின் மேல் மழை நீர் தேங்கி அந்த நீர் கசிந்து அலுவலகத்திற்கு உள்ளேயே ஒழுகி வந்ததாம். இதனால் சேதமடைந்த கட்டிடத்தில் கோப்புகள் வைக்கவோ, பணி செய்யவோ இயலாத நிலை ஏற்பட்டதால் வட்டாட்சியர் அலுவலகம் அருகே (பல ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த குளித்தலை போலீஸ் நிலையம் இருந்த இடத்தில்) வருவாய் துறை கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடத்தில் பொதுப்பணித்துறை அலுவலகம் மாற்றப்பட்டதாம். அங்கு சுமார் ஒரு வருடமாக பொதுப்பணித்துறை அலுவலக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பொதுப்பணித்துறை அலுவலகம் ஏற்கனவே செயல்பட்டு வந்த கட்டிடத்தில் மராமத்து பணிகள் தற்போது வரை முடிக்கப்படவில்லை.

மராமத்து பணிகள்

சுமார் ஓராண்டு நிறைவு பெற உள்ள நிலையில் மராமத்து பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இந்த கட்டிடம் பழுதடைந்ததால் வேறு இடத்தில் உள்ள கட்டிடத்தில் பொதுப்பணித்துறை அலுவலக பணிகள் நடந்து தானே வருகிறது பணிகள் ஒன்றும் தடைபடவில்லையே என்று அவர்கள் தரப்பில் கூறப்படுகிறதாம். 3 தாலுகா (வட்ட) பகுதிகளில் உள்ள அரசு அலுவலக கட்டிடங்களை கட்டவும், மராமத்து பணிகளை மேற்கொள்ளக்கூடிய இந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கள் அலுவலக கட்டிடத்தில் மராமத்து செய்து கொள்ளவே ஒரு வருடம் ஆகிறது என்றால், இவர்கள் எவ்வாறு மற்ற அரசு அலுவலக கட்டிடங்களை கட்டவும், சேதம் அடைந்த கட்டிடங்களில் மராமத்து பணிகள் செய்யவும் முனைப்புடன் செயல்படுவார்கள் என்கின்ற மிகப்பெரிய கேள்வி அனைத்து தரப்பினர் சார்பில் முன்வைக்கப்படுகிறது. ஒரு வருடம் நிறைவுபெற உள்ள நிலையில் இந்த பொதுப்பணித்துறை அலுவலக கட்டிடத்தில் மராமத்து பணிகள் மேற்கொள்ள காலதாமதம் ஏற்படுவது ஏன்? மராமத்து செய்ய போதுமான நிதி கிடைக்கவில்லையா? அதன் காரணமாகவே மராமத்துபணியை மேற்கொள்ளக்கூடிய ஒப்பந்ததாரர்களோ, அல்லது தனி நபர்களோ பணிகளை முடிக்க காலதாமதம் செய்கிறார்களா என்பது தெரியவில்லை.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

மராமத்து பணி செய்ய போதுமான தொகை ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றால், தங்கள் அலுவலக கட்டிடத்திற்கே மராமத்து பணி செய்ய நிதியை பெற முடியாத பொதுப்பணித்துறை அதிகாரிகள் பிற அலுவலக கட்டிடங்களுக்கு எவ்வாறு உரிய நேரத்தில் நிதி பெற்று பணியை முடிப்பார்கள் என்ற ஐயப்பாடு எழுகிறது. எனவே மற்றவர்கள் பேச்சுக்கு இடம் அளிக்காமல் ஆமை வேகத்தில் நடைபெறும் மராமத்து பணிகளை துரிதப்படுத்தி பணிகளை முடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை முன்வைக்கின்றனர்.


Next Story