ஒடுகம்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை


ஒடுகம்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை
x

ஒடுகம்பட்டி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் மட்டுமே பணியில் இருப்பதாகவும், ஆசிரியர்களை நியமிக்க கோரி மாணவ-மாணவிகளின் பெற்றோர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை

அரசு பள்ளி

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். கூட்டத்தில் குடுமியான்மலை அருகே ஒடுகம்பட்டி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர் பொதுமக்கள் பலர் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் அளித்த மனுவில், ``எங்கள் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் சுமார் 100 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை. தலைமை ஆசிரியர் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். எங்கள் குழந்தைகளுக்கு முறையான கல்வி கிடைக்காததால் அவர்களது எதிர்காலம் பாதிப்படையும் நிலை உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் பள்ளியில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். ஆசிரியர்களை நியமிக்க கோரி ஏற்கனவே பல முறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த பள்ளியில் போதுமான ஆசிரியர்களை நியமிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என தெரிவித்திருந்தனர்.

368 மனுக்கள்

இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கடையக்குடி நம்பம்பட்டி கிராமத்தில் தேவையில்லாத இடத்தில் சாலை அமைப்பதை தடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த மக்கள் மனு அளித்தனர்.

கூட்டத்தில் மொத்தம் 368 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி உத்தரவிட்டார்.


Next Story