தாம்பரம்-செங்கோட்டை ரெயிலை தினசரி இயக்க வேண்டும் தொழில் வணிக கழகத்தினர், பொதுமக்கள் கோரிக்கை
ஜூன் மாதம் முதல் வாரத்தில் மும்முறை இயக்கப்பட உள்ள தாம்பரம்-செங்கோட்டை ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என காரைக்குடி தொழில் வணிக கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காரைக்குடி
ஜூன் மாதம் முதல் வாரத்தில் மும்முறை இயக்கப்பட உள்ள தாம்பரம்-செங்கோட்டை ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என காரைக்குடி தொழில் வணிக கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தாம்பரம்-செங்கோட்டை ரெயில்
தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை காரைக்குடி வழியாக இயங்கும் அதிவேக ரெயில் சேவையை கடந்த மாதம் சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த ரெயில் சேவை கடந்த மாதம் 17-ந்தேதி முதல் செங்கோட்டையில் இருந்து தனது சேவையை தொடங்கியது. செங்கோட்டையில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு தென்காசி, பாவூர்சத்திரம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நெல்லை, விருதுநகர், காரைக்குடி வழியாக திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம் தடத்தில் தாம்பரத்திற்கு மறுநாள் காலை 6.5 மணிக்கு செல்கிறது. இதனால் செங்கோட்டை, நெல்லை, விருதுநகர், காரைக்குடி பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து காரைக்குடி தொழில் வணிக கழக தலைவர் சாமிதிராவிடமணி கூறியதாவது:- தாம்பரம்-செங்கோட்டை அதிவேக ரெயிலில் சாதாரண கட்டணமாக ரூ.240, தூங்கும் வசதி உள்ள முன் பதிவு பெட்டியில் ரூ.435 வீதம் கட்டணம் உள்ளது. இந்த ரெயிலில் 3 ஜெனரல் கோச் பெட்டிகளும், 5 ஸ்லீப்பர் கோச், 5 த்ரீ டயர் கோச் மற்றும் 3 இரண்டு டயர் ஏசி கோச் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
தினசரி ரெயிலாக
இந்த ரெயில் வரும் ஜூன் மாதம் முதல் வாரம் மும்முறை இயக்கப்பட உள்ளது. இதனால் வரும் ஜூன் மாதங்களில் குற்றாலம் சீசன் களைகட்ட தொடங்கி விடும். அந்த நேரத்தில் இந்த பகுதி மக்கள் குற்றாலம், தென்காசி, பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று வர இந்த ரெயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுதவிர பயண தூரம் அதிகமாக இருந்தாலும் தென் மாவட்ட மக்களும், டெல்டா மாவட்ட மக்களுக்கும் இந்த ரெயில் சேவை மிகவும் வசதியாக இருக்கும். இந்த அதிவேக ரெயில் நெல்லை, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் வழியில் நின்று செல்லவதால் பயணிகளுக்கு எவ்வித சிரமமும் இருக்காது.
மேலும் தென் மாவட்ட மக்கள் காரைக்குடி பகுதிக்கும், காரைக்குடி பகுதியில் உள்ள மக்கள் தென் மாவட்டங்களுக்கும் சென்று வர இணைப்பு பாலமாகவும் இந்த ரெயில் சேவை இருக்கும். இந்த ரெயில் சேவையின் வரவேற்பை பொறுத்து தினசரி ரெயிலாக மாற்றவும் தென்னக ரெயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.