மாநில அரசும் 4 சதவீத அகவிலைப்படியை உயர்த்த வேண்டும்
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது போல் தமிழக அரசும் 4 சதவீத அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது போல் தமிழக அரசும் 4 சதவீத அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
அகவிலைப்படி
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், முதல்-அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
விலைவாசி புள்ளி உயர்விற்கேற்ப மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகிறது. அதனை பின்பற்றி தமிழக அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிப்பது நடைமுறையாகும். அந்த வகையில் மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு தனது ஊழியர்களுக்கு விலைவாசி புள்ளிக்கேற்ப 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்துவிட்டது. அதனை பின்பற்றி புதுச்சேரி அரசும் தனது ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது.
எனவே, கடந்த கால நடைமுறையை பின்பற்றி தமிழக அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வை 1.7.2022 முதல் உடனடியாக அறிவித்து நிலுவை தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும்.
உயர்த்த வேண்டும்
இதன் மூலம் தற்போது வழங்கப்பட்டுவரும் அகவிலைப்படி 34 சதவீதத்தை 38 சதவீதமாக உயர்த்த வேண்டும். அகவிலைப்படி நிலுவை தொகையை 1.7.2022 முதல் கணக்கிட்டு ரொக்கமாக தீபாவளி பண்டிகைக்குள் வழங்க வேண்டும். அதன் மூலம் தீபாவளி பண்டிகையை தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட தமிழக அரசு வழிவகை செய்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.