குடியரசு தின விழா கொண்டாட்டம்


குடியரசு தின விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2023 3:00 AM IST (Updated: 28 Jan 2023 3:04 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் இறைப்புவாரி பஞ்சாயத்து ஏமன்குளத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு குடியரசுதின விழா நடைபெற்றது. இறைப்புவாரி பஞ்சாயத்து தலைவர் மோகனா யோசுவா தேசியக்கொடி ஏற்றினார். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஊராட்சி துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன், வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உவரியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கரைச்சுத்து உவரி பஞ்சாயத்து தலைவர் கவிதா ராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பஞ்சாயத்து துணைத்தலைவர் உவரி ஏ.கே.ஏ.ராஜன் கிருபாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாங்குநேரி அருகே உள்ள சிங்கநேரி ஊராட்சியில் உள்ள காரங்காடு புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளி, சிங்கநேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சிங்கநேரி ஊராட்சி மன்ற அலுவலகம் ஆகிய இடங்களில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. சிங்கநேரி ஊராட்சி மன்றத்தலைவர் முத்துசொர்ணம் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி தேசிய கொடியேற்றி வைத்தார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பொன்னம்மாள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மெர்லி, சங்கரி, ஊர் பிரமுகர் ராஜாமணி பண்ணையார், ஊராட்சி செயலர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் கு.பார்வதி மோகன் தேசியக்கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜன், துணைத்தலைவர் நம்பி ரமேஷ், வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை கூட்டுறவு பேரங்காடி வளாகத்தில் கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை தேசியக்கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் பேரங்காடி மேலாளர் ஜமீன்பானு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மானூர் யூனியன் அலுவலகத்தில் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகிருஷ்ணன், யூனியன் மேலாளர் புகாரி, மாவட்ட பிரதிநிதி வின்சென்ட், கவுன்சிலர் சின்னத்துரை, அரிச்சந்திரன், முகமது அலி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் யூனியன் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story