லாரி மோதி ரெயில்வே கேட் பழுது
குளித்தலையில் லாரி மோதி ரெயில்வே கேட் பழுதானதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரெயில்வே கேட் சேதம்
கரூர் மாவட்டம், குளித்தலை-மணப்பாறை சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. குழாய் வடிவிலான இந்த ரெயில்வே கேட் ரெயில் செல்லும் நேரங்களில் மேலும் கீழும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மற்றும் கரூர் மார்க்கமாக வந்து செல்லும் ரெயில்கள் குளித்தலை வழியாக செல்லும்போது இந்த ரெயில்வே கேட் மூடப்பட்டு திறக்கப்படும். இந்தநிலையில் நேற்று காலை சுமார் 9.30 மணியளவில் இந்த ரெயில்வே கேட்டு வழியாக சென்ற லாரி ஒன்று ரெயில்வே கேட்டின் மீது மோதி உள்ளது. இதில் லாரி மோதியதால் ரெயில்வே கேட் சேதமடைந்தது. இதுகுறித்து ரெயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பழுதான ரெயில்வே கேட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
பிற்பகல் 12.30 வரை ரெயில்கள் வரும் பொழுது மட்டும் வாகனங்கள் ரெயில்வே கேட்டை கடந்து செல்லாத வகையில் ரெயில்வே ஊழியர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ெரயில் சென்ற பின்னர் வாகனங்கள் கேட்டை கடந்து செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனால் பிற்பகல் சுமார் 12.35 மணி முதல் 1.45 மணி வரை எந்த வாகனங்களும் ரெயில்வே கேட்டை கடந்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் ரெயில்வே கேட்டின் இருபுறமும் உள்ள சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டது. பழுது பார்க்கும் பணி முழுமையாக நிறைவடைந்த பின்னரே வாகனங்கள் ரெயில்வே கேட்டை கடக்க அனுமதிக்கப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.