பள்ளிப்பட்டில் முட்புதர்கள் சூழ்ந்து பழுதடைந்து காணப்படும் எம்.எல்.ஏ. அலுவலக கட்டிடம்; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


பள்ளிப்பட்டில் முட்புதர்கள் சூழ்ந்து பழுதடைந்து காணப்படும் எம்.எல்.ஏ. அலுவலக கட்டிடம்; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x

பள்ளிப்பட்டில் முட்புதர்கள் சூழ்ந்து பழுதடைந்து காணப்படும் எம்.எல்.ஏ. அலுவலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

எம்.எல்.ஏ. அலுவலக கட்டிடம்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதி கடந்த 2002-ம் ஆண்டு பள்ளிப்பட்டு சட்டமன்ற தொகுதியாக தமிழகத்தில் இருந்து வந்தது. அப்போது எம்.எல்.ஏ.வுக்கான அலுவலக கட்டிடம் பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக வளாகத்தில் பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டது.

இந்த கட்டிடத்தை தமிழ்நாடு அரசு தலைமை கொறடாவாக இருந்த பள்ளிப்பட்டு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. பி.எம்.நரசிம்மன் 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ந் தேதி திறந்து வைத்தார். அதன் பிறகு இந்த கட்டிடத்தில் அவர் அமர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அதன் பிறகு இந்த கட்டிடம் பழுதடைந்தது. இதையடுத்து நடந்த சட்டமன்ற தேர்தலில் பள்ளிப்பட்டு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன் வெற்றி பெற்றார். இவர் இந்த பகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது 2008-2009-ம் ஆண்டு கட்டிட கட்டுமான மற்றும் பராமரிப்பு பணி பொதுப்பணித்துறை சார்பாக நடைபெற்றது.

கோரிக்கை

அதன் பிறகு சில காலம் அவர் எம்.எல்.ஏ.வாக இந்த கட்டிடத்தில் அமர்ந்து பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அதன் பிறகு பள்ளிப்பட்டு சட்டமன்ற தொகுதி கலைக்கப்பட்டு திருத்தணி சட்டமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டது. அன்று முதல் இந்த கட்டிடம் எதற்கும் உபயோகப்படுத்தப்படாமல் முட்புதர்கள் நிறைந்து உபயோகமற்ற வகையில் பழுதான நிலையில் காணப்படுகிறது.

அரசு பணத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தாமல் இப்படியே போட்டு வைத்திருப்பதால் கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த கட்டிடத்தை பழுது பார்த்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story