கோவை குற்றால அருவி மீண்டும் திறப்பு - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!


கோவை குற்றால அருவி மீண்டும் திறப்பு - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
x

கோவை:

கோவை மாவட்டம் பேரூருக்கு மேற்கே, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில், கோவை குற்றால அருவி உள்ளது. இங்குள்ள, அருவியில் வெள்ளியை உருக்கி விட்டது போல் கொட்டும் மூலிகை தண்ணீரில் குளிக்க, தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெய்த, தொடர் கனமழை காரணமாக, கோவை குற்றால நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, அருவிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவை குற்றால அருவியில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டதால், நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அருவியல் நீராடிச் சென்றனர்.

மேலும் சுற்றுலா பயணிகள் குளிக்க காலை 10 மணி முதல் 11 மணி வரையும் காலை 11:30 முதல் மதியம் 12:30 மணி வரையும் மதியம், 1 முதல் 2 மணி வரையும் அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு அனுமதி சீட்டு பெற்று அருவிக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் மதியம் 1 மணிக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆங்காங்கே அருவிப் பகுதியில் வனத்துறை சார்பில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story