20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வாடகை வாகன டிரைவர்கள் போராட்டம்


20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வாடகை வாகன டிரைவர்கள் போராட்டம்
x

வாகனங்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயித்தல், தமிழகத்தில் பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வாடகை கார் டிரைவர்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

சென்னை

வாகன காப்பீடு கட்டணங்களை மத்திய அரசு குறைக்க வேண்டும், ஓலா, ஊபர் போன்ற செயலியை அரசே உருவாக்கி நடத்த வேண்டும், வாகனங்களுக்கு மீட்டர் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும், பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே வாடகை வாகன டிரைவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின்போது, தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில செயலாளர் குப்புசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16-ந்தேதி எங்களுடைய போராட்டத்தை தொடங்கினோம். தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளது. 3-வது நாளாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஓலா, ஊபர், போர்ட்டர் போன்ற தனியார் வாடகை வாகன நிறுவனங்கள் சட்டவரையறைக்குள் வராத செயலிகளை வைத்துள்ளது. இதனால், இந்த செயலில் பதிவு செய்து வாகனத்தை இயக்கும் டிரைவர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை.

ஓலா, ஊபர் நிறுவனங்கள் எங்களிடமிருந்து அதிகமான கமிஷன் தொகையை எடுத்துக்கொள்கிறது. எனவே, அவர்கள் கமிஷன் தொகையை குறைத்துக்கொள்ள வேண்டும். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது ஓலா, ஊபர் போன்று அரசாங்கமே தனி செயலியை தொடங்கும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறினார். ஆனால், இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்டமன்றத்தில் கூறியதுபோல தமிழக அரசே செயலியை உருவாக்கி அதை நடத்த வேண்டும். அப்போதுதான் டிரைவர்களின் நலன் காக்கப்படும்.

ஓலா, ஊபர் போன்று அரசே தனி செயலியை ஏற்படுத்தினால் மட்டுமே தொழிலாளர்களின் நலன் காப்பாற்றப்படும். தொழிலாளர்களை வரையறை செய்வதற்காக தனியாக நலவாரியம் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். இதேபோல, தமிழகம் முழுவதும் வாகனங்களுக்கு பார்க்கிங் வசதி இல்லை. பைக் டாக்சியை இதுவரை அரசு அனுமதிக்கவில்லை. ஆனாலும், ஓடிக்கொண்டிருக்கிறது. மத்திய அரசின் சட்டப்படி ஓட்டுகிறோம் என்று கூறுகிறார்கள். இது எங்களுடைய தொழிலை பாதிக்கிறது. அவர்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கிவிட்டு ஓட்டலாம். அதற்கு நாங்கள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாடகை கார் டிரைவர்கள் போராட்டம் காரணமாக சென்னையில் நேற்று ஆட்டோ மற்றும் போராட்டத்தில் ஈடுபடாத வாடகை கார்களின் கட்டணங்கள் உயர்ந்தது. போராட்டத்திற்கு முன்னதாக 20 கிலோ மீட்டருக்கு ரூ.400 சேவை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஆனால், நேற்று 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டது. குறைந்தது ரூ.50 முதல் அதிகபட்சமாக ரூ.120 வரை கட்டணம் உயர்ந்தது. ஆட்டோக்களுக்கு ரூ.50 குறைந்தபட்ச கட்டணமாக இருந்தது ரூ.70 ஆகவும் வசூலிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.


Next Story