ரூ.2 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்
திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ரூ.2 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் கீழையூரில் உள்ள 8 வீரட்டானங்களுள் 2-வது வீரட்டானம் என பெயர் பெற்ற சிவானந்தவல்லி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கடந்த 2000-வது ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 22 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெறாத நிலையில் தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறை செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறையின் சிறப்பு ஆணையராக கூடுதல் பொறுப்பு வகித்து வருபவரான திருக்கோவிலூரை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெ.குமரகுருபரன் முயற்சியால் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் பரிந்துரையை ஏற்று வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருப்பணிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் ரூ.37½ லட்சம் செலவில் தேர் சீரமைப்பு பணி, ரூ.33 லட்சத்தில் சாமி சன்னதி பழுது பார்க்கும் பணி, ரூ.10½ லட்சம் செலவில் அம்மன் சன்னதி பராமரிப்பு பணி, ரூ.14 லட்சத்தில் சாமி மற்றும் அம்மன் ராஜகோபுரம் பழுது பார்க்கும் பணி, ரூ.26 லட்சத்தில் மதில் சுவர் அமைக்கும் பணி, ரூ.31½ லட்சம் மதிப்பில் சாமி சன்னதியின் உள் பிரகாரத்தில் தரைதளம் அமைக்கும் பணி, ரூ.14 லட்சத்து 80 ஆயிரம் செலவில் வாகன மண்டபம் மற்றும் தேர்முட்டி மண்டபம் பழுது பார்க்கும் பணி, ரூ.2¾ லட்சம் செலவில் ராஜகோபுரத்தில் இடிதாங்கி பொருத்தும் பணி, ரூ.16 லட்சத்து 55 ஆயிரம் செலவில் சாமி சிலைகள் பாதுகாப்பு அறை கட்டும் பணி உள்பட மொத்தம் ரூ.2 கோடியே 9 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் ஒரு சில மாதங்களில் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடைபெறும் என கூறப்படுகிறது.முன்னதாக இந்த பணியை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு பணியை துரிதப்படுத்தி வருகின்றனர்.