காட்பாடி ரயில் நிலையத்தில் ரூ.329 கோடியில் மறு சீரமைப்பு செய்யும் பணிகள் தொடக்கம்
வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தை ரூ.329 கோடியில் மறு சீரமைப்பு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வேலூர்,
காட்பாடி ரெயில் நிலையம் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 120 ரெயில்கள் சென்னை மார்க்கமாவும், ஜோலார்பேட்டை மார்க்கமாகவும், திருப்பதி மார்க்கமாகவும், வேலூர் மார்க்கமாகவும் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் சுமார் 30 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நாடு முழுவதும் ரெயில் நிலையங்களை மேம்படுத்த ரயில்வே துறை திட்டமிட்டது. ரெயில் நிலையங்களை பழமை மாறாமல் புதுப்பித்து ஆரம்பத்தை பறைசாற்றும் வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அந்த வகையில் நாடு முழுவதும் முதற்கட்டமாக 50 ரயில் நிலையங்கள் சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்பட உள்ளது.
தமிழகத்தில் காட்பாடி, சென்னை எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய 5 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்து இருந்தார். மேலும் இந்த ரெயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.2 ஆயிரம் கோடியில் திட்டங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தை ரூ.329 கோடியில் மறு சீரமைப்பு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. வேலூர் கோட்டை நகரம் போன்ற வடிவமைப்புடன் காட்பாடி ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன.