'தினத்தந்தி' செய்தி எதிரொலி; தார்சாலையில் புதைந்த ஆட்டு உரல்கள் அகற்றம்
தேனியில் ‘தினத்தந்தி' செய்தி எதிரொலியாக தார்சாலையில் புதைந்த ஆட்டு உரல்கள் அகற்றப்பட்டன.
தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் ரூ.2 கோடியே 62 லட்சம் செலவில் தார்சாலைகள் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த சாலை சீரமைப்பு பணிகள் தரமாக நடக்கிறதா? என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்பு நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள மிராண்டா லைன் சி.2 திட்டச்சாலை சீரமைக்கப்பட்டது. அப்போது சாலையில் கிடந்த 2 ஆட்டு உரல்களை அகற்றாமல் அதன் மீது தார்சாலை அமைக்கப்பட்டது. அதில் ஒரு ஆட்டு உரல் மண்ணில் முழுமையாக புதைந்த நிலையிலும், மற்றொன்று அரைகுறையாக புதைந்து சுமார் அரை அடி உயரம் வெளியே நீட்டிக்கொண்டும் இருந்தது. அதை அகற்றாமல் சாலை அமைத்துள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி'யில் நேற்று செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக நேற்று காலை தார்சாலையில் இருந்த ஆட்டு உரல்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, தொழிலாளர்கள் சிலர் தார்சாலையில் இருந்த ஆட்டு உரல்களை அப்புறப்படுத்தினர். பின்னர், குழியாக மாறிய அந்த இடத்தில் ஜல்லிக்கற்களை கொட்டினர். மேலும் அதன்மீது தார்கலவையால் ஒட்டுபோட்டு சீரமைப்பு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதேபோல், நகரில் சாலை சீரமைப்பு பணிகள் நடந்த இடங்களில் பாதாள சாக்கடை குழாய்களின் மூடிகள் அமைந்துள்ள பகுதிகள் குழியாக காட்சி அளிப்பதால் அதையும் சரி செய்து தரமான சாலை அமைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.