மார்த்தாண்டத்தில்நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
மார்த்தாண்டத்தில் சாலையோரம் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.
குழித்துறை:
மார்த்தாண்டத்தில் சாலையோரம் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.
நடை பாதை ஆக்கிரமிப்பு
மார்த்தாண்டம் பகுதியில் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதாக குழித்துறை நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. குறிப்பாக நடைபாதையில் பழக்கடைகள், பூக்கடைகள் போன்றவை அமைத்து வியாபாரம் செய்வதால் நடந்து செல்கிறவர்களுக்கு இடையூறு ஏற்படுவதால் அவற்றை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று நகராட்சி சுகாதார ஆய்வாளர் குருசாமி, நகர திட்ட மேற்பார்வையாளர் கீதா ஆகியோர் முன்னிலையில் நகராட்சி ஊழியர்கள் மார்த்தாண்டத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
எதிர்ப்பு-பரபரப்பு
அவர்கள் மார்த்தாண்டம் சந்திப்புக்கு அருகே மேம்பாலத்தின் அடிப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பழக்கடையை அகற்ற முற்பட்டனர். அப்ேபாது கடையில் இருந்தவர்கள் அதற்கு ஒத்துழைக்காமல் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் 'நகராட்சி பகுதியில் பம்மத்தில் இருந்து குழித்துறை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு இங்கு வந்து நடவடிக்கை எடுங்கள்' என்று வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பெட்டிகள், கூடைகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றி லாரியில் ஏற்றினர். ஆனால் அந்த கடையை நடத்தியவர்கள் கேட்டுக் கொண்டதால் அங்கிருந்த பழங்களை அகற்ற அவகாசம் கொடுத்தனர். இதுபோல் அந்த பகுதியில் நடைபாதைைய ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த 5 பூக்கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.