நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
Removal of sidewalk encroaching shops
கன்னியாகுமரியில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
ஆக்கிரமிப்பு கடைகள்
கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுடன் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்த சீசனை முன்னிட்டு கன்னியாகுமரி கடற்கரை சாலை, மெயின் ரோடு போன்ற பகுதிகளில் நடை பாதைகளை ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடைகள் போன்றவை திடீரென போடப்பட்டன. இதற்கிடையே கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வருகிற 28-ந் தேதி சீசன் கடைகள் ஏலம் விடப்படுகிறது.
இந்தநிலையில் கன்னியாகுமரி கடற்கரை சாலை, காந்தி மண்டபம் பஜார், மெயின்ரோடு, பழைய பஸ் நிலைய சந்திப்பு போன்ற பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த 150-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் ஆகியவை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டது.
வியாபாரிகள் எதிர்ப்பு
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் தலைமையில் பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஸ் ஆகியோர் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், வியாபாரிகள் சிலர் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து பா.ஜ.க. சார்பில் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், கன்னியாகுமரி பேரூராட்சியில் சீசன் கடைகள் அமைப்பது குறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் வருகிற 28-ந் தேதி நடைபெறவுள்ள ஏலத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.