மெரினா கடற்கரையில் கடைகள் அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


மெரினா கடற்கரையில் கடைகள் அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x

லூப் சாலையில் உள்ள மீன் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து அதிகாரிகள் அகற்றினார்கள்.

சென்னை,

சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையை மீன் கடைகள், உணவகங்கள் ஆக்கிரமித்து உள்ளதாகவும், இங்கு வருபவர்கள் வாகனங்களை சாலைகளில் நிறுத்துவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் சென்னை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் எஸ்.என்.சுந்தர், பி.பி.பாலாஜி ஆகியோர் மெரினா கடற்கரை லூப் சாலையில் மேற்கு பகுதியில் 25 சதவீதம் சாலை, நடைபாதைகளால் ஆக்கிரமித்து மீன் கடைகள், சிறு ஓட்டல்கள் செயல்படுகின்றன.

இப்படி பொது சாலைகளை ஆக்கிரமிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது. இதில் எந்த ஒரு சமரசமும் செய்ய முடியாது. இந்த சாலை மீன் கழிவு கொட்டுவதற்காக உள்ளதா? லூப் சாலையின் மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிற 18-ந்தேதிக்குள் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

லூப் சாலையின் மேற்கு பகுதியில் எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று மெரினா கடற்கரை லூப் சாலையில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினார்கள்.

லூப் சாலையில் உள்ள மீன் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து அதிகாரிகள் அகற்றினார்கள். இந்த நிலையில் கடைகள் அகற்றப்படுவதை அறிந்ததும் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் அங்கு திரண்டனர்.

அவர்கள் மீன் கடைகள் மற்றும் உணவகங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். மாநகராட்சி அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக இங்கு வியாபாரம் செய்கிறோம். கடைகளை அகற்றினால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறினார்கள்.

அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் கோர்ட்டு உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினார்கள். ஆனாலும் மீனவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில பெண்கள் சாலையில் அமர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

ஆனாலும் மீனவர்களின் எதிர்ப்பை மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. போலீசாரின் உதவியுடன் ஆக்கிமிரப்பை அகற்றினார்கள். அங்கிருந்த மீன்கள், வலைகள் ஆகியவற்றையும் அப்புறப்படுத்தினார்கள். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி அதிரடியாக நடந்ததால் பெரும்பாலான மீனவர்கள் கடைகளில் இருந்த பொருட்கள் மற்றும் மீன்களை எடுத்து சென்றனர்.

அகற்றப்படாமல் இருந்த பொருட்கள் மற்றும் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள். ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்ட போது அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.


Next Story