சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்


சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

செந்துறையில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அப்போது அதிகாரிகளுடன், வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

நத்தம் தாலுகா செந்துறை மெயின்ரோட்டில் சாலையோரத்தில் கடைகள் வைத்து ஆக்கிரமித்து இருந்தனர். இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றுவது தண்டாரோ போட்டு அறிவித்தனர்.

இதையடுத்து கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்வதாக தெரிவித்தனர். ஆனால் வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதையடுத்து நேற்று காலையில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பாலகிருஷ்ணன், நத்தம் உதவி பொறியாளர் சரவணன், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் நத்தம் போலீஸ்- இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவரும், பொதுமக்களும், வியாபாரிகளிடம் சமரசம் செய்து ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு ஒத்துழைக்குமாறு தெரிவித்தனர். இதையடுத்து நாளை (வியாழக்கிழமை) மாலை வரை வியாபாரிகள் கடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை தானாகவே அகற்ற வேண்டும். அப்படி அகற்றவில்லை என்றால் மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலையில் அனைத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு வியாபாரிகள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை அதிகாரிகள் நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story