நெல்லையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்


நெல்லையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

வண்ணார்பேட்டையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன

திருநெல்வேலி

நெல்லை:

வண்ணார்பேட்டையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்புகள்

நெல்லை மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் பொதுமக்கள் சாலையோரம் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் கூறினர்.

இந்தநிலையில் நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் ரவுண்டானா மற்றும் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.

அகற்றம்

இதையடுத்து மாநகராட்சி உதவி ஆணையாளர் லெனின், மாநகராட்சி செயற்பொறியாளர் நாராயணன், உதவி பொறியாளர் சிவசுப்பிரமணியன், சுகாதார அலுவலர் இளங்கோ மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் நேற்று காலையில் நெல்லை வண்ணார்பேட்டை ரவுண்டானா பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள்.

கடைகளின் முன்புள்ள மேற்கூரைகள், விளம்பர பலகைகள், வாறுகாலில் கட்டப்பட்ட கான்கிரீட் சிலாப்புகள் போன்றவற்றையும் அகற்றினர். கடைகளின் முன்பு வைக்கப்பட்டு இருந்த பல்வேறு பொருட்களையும் அப்புறப்படுத்தினர்.

வியாபாரிகள் எதிர்ப்பு

சாலையோரம் தள்ளுவண்டிகளில் செயல்பட்ட கடைகளையும், அங்கிருந்த மேஜை, நாற்காலிகள் போன்றவற்றையும் அகற்றி, வாகனங்களில் ஏற்றி சென்றனர்.

கடைகளின் முன்புள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு சில வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டன.


Next Story