விழுப்புரத்தில்போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த நடைபாதை கடைகள் அகற்றம்
விழுப்புரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த நடைபாதை கடைகள் அகற்றப்பட்டது.
விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை என்பது தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. இதற்கு சாலையோரங்களில் இருக்கும் நடைபாதை கடைகளும் மற்றும் தாறுமாறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. குறிப்பாக மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே சாலையோரங்களை ஆக்கிரமித்து ஏராளமான நடைபாதை கடைகள் போடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் சாலை விரிவாக்கப்பணிகள் முடிந்தும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் நேற்று விழுப்புரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே சாலையோரத்தில் ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கடைகளான பழக்கடைகள், ஜூஸ் கடைகள், தள்ளுவண்டி டிபன் கடைகள் மற்றும் கடைகளின் விளம்பர பெயர் பலகைகள் ஆகியவற்றை அகற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், இதுபோன்று சாலையோரங்களில் நடைபாதைகளை ஆக்கிரமித்து கடைகள் வைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.