ஊராட்சி செயலாளர், பணித்தள பொறுப்பாளர் பணியிடை நீக்கம்
மாதனூர் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்த கலெக்டர் அமர்குஷ்வாஹா, 100 நாள் வேலை பணியாளர்களின் வருகை படிவேடு வைக்காத பாலூர் ஊராட்சி செயலாளர் மற்றும் பணித்தள பொறுப்பாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மாதனூர் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்த கலெக்டர் அமர்குஷ்வாஹா, 100 நாள் வேலை பணியாளர்களின் வருகை படிவேடு வைக்காத பாலூர் ஊராட்சி செயலாளர் மற்றும் பணித்தள பொறுப்பாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
பணியிடை நீக்கம்
திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாலூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.13.63 லட்சம் மதிப்பில் அடர்வன காடுகள் வளர்ப்பு திட்டத்தில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளை நேரில் பார்வையிட்டார். மேலும் 100 நாள் வேலை பணியாளர்களின் வருகை பதிவேட்டை பணிதளத்தில் வைக்காத காரணத்திற்காக பாலூர் ஊராட்சி செயலாளர் முரளி என்பவரையும், பணிதள பொறுப்பாளர் திவ்யா என்பவரையும் பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து திருமலை குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரிக்காத காரணத்திற்காக வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், பணி மேற்பார்வையாளர் சாந்தகுமாரி என்பவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
காலதாமதமின்றி வழங்க வேண்டும்
பின்னர் திருமலை குப்பம் ஊராட்சி கவுரிபுரம் கிராமத்தில் ரூ.3.87 லட்சம் மதிப்பில் 100 மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சாலை, மாதனூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.4.60 லட்சம் மதிப்பில் எம்.எம்.நகர் கானாறுக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை, வெங்கிலி ஊராட்சியில் ரூ.30 லட்சத்தில் நடைபெற்றுவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடம் கட்டுமான பணி உள்ளிட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின் போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதியம் சரியாக குறிப்பிட்ட நாட்களுக்குள் காலதாமின்றி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து சாலை, தடுப்பணை, அங்கன்வாடி, கழிவறைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
2 மாதத்திற்குள்...
மேலும் குடிநீர் வழங்கும் பணி, பண்ணை குட்டை அமைக்கும் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி பணிகளை மேற்கொள்ளவும், மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வருகின்ற பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை 2 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும், மாதனூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து அரசு பள்ளி வளாகங்களையும் சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க வேண்டும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலரை, கலெக்டர் அறிவுறுத்தினார்.
ஆய்வுகளின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் கலீல், சந்திரன், உதவி பொறியாளர் பூபாலன், பணி மேற்பார்வையாளர் சாந்தகுமாரி மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.