தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் அகற்றம்


தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் அகற்றம்
x

தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் அகற்றம்

தஞ்சாவூர்

தஞ்சை சரபோஜி மார்க்கெட் முன்பு இருந்த தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

சரபோஜி மார்க்கெட்

தஞ்சை கீழவாசலில் சரபோஜி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு மளிகை மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரம், நாட்டு மருந்து கடைகள், காய்கறிகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் இருந்தது. இங்கிருந்த 350 கடைகளையும் மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வந்தது. இதில் உள்ள கட்டிடங்கள் சேதம் அடைந்ததால் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புதிய கடைகள் கட்டப்பட்டன. மொத்தம் 308 கடைகள் கட்டப்பட்டன.

இவற்றில் 6 கடைகள் அலுவலக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 302 கடைகள் மாநகராட்சி நிர்வாகம் மூலம் பொது ஏலம் விடப்பட்டது. சரபோஜி மார்க்கெட்டில் இயங்கி வந்த 350 கடைகளை முழுவதுமாக இடித்துவிட்டு தற்போது ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் 308 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கடைகள் ஏலம் விடப்பட்டு, தற்போது சரபோஜி மார்க்கெட் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அரிசி கடை, நாட்டு மருந்து கடை, டீக்கடை, டிபன் கடை என ஒவ்வொரு கடையாக திறக்கப்பட்டு வருகிறது.

தரைக்கடைகள் அகற்றம்

இந்தநிலையில் சரபோஜி மார்க்கெட் வியாபாரிகள் நேற்றுமுன்தினம் மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரை சந்தித்து, சரபோஜி மார்க்கெட்டில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும் சரபோஜி மார்க்கெட்டின் முன்புறம் தள்ளுவண்டி மூலமாகவும், தரைக்கடைகள் மூலமாகவும் காய்கறிகள், பூண்டு, பூக்கள், பூஜை பொருட்கள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இவற்றை எல்லாம் அகற்றிவிட்டு, மக்கள் தடையின்றி மார்க்கெட்டிற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அதன்படி உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்றுகாலை பொக்லின் எந்திரத்துடன் கீழவாசல் பகுதிக்கு சென்றனர். அங்கு சரபோஜி மார்க்கெட்டிற்கு முன்புறம் இருந்த தரைக்கடைகள், தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்தினர். மேலும் அந்த பகுதிகளில் மேடு, பள்ளமாக காட்சி அளித்த மண்மேட்டை பொக்லின் எந்திரம் மூலம் சமப்படுத்தினர்.


Next Story