போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
பள்ளிகொண்டா-குடியாத்தம் சாலையில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கும் வகையில் சாலையை விரிவாக்கம் செய்ய நந்தகுமார் எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுத்தார்.
அவ்வாறு விரிவாக்கம் செய்யப்பட்ட சாைலயில் கழிவுநீர் கால்வாயும் கட்டப்பட்டு வடிகால் வசதி ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் பள்ளிகொண்டாவில் குடியாத்தம் பஸ் நிறுத்தம் அருகில் உணவகங்கள், டீக்கடைகளின் உரிமையாளர்கள் அவர்களது கடையை விரிவாக்கம் செய்வதற்காக மீண்டும் கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்வதாக புகார்கள் வந்தன.
அதற்கு மேலும் இடையூறாக உணவகங்களுக்கு சாப்பிட வருபவர்கள் வாகனங்களை சாலையிலே நிறுத்தி விடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருக்கு புகார் கொடுத்தனர். இந்த நிலையில் நேற்று காலை தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் யோகராஜ் தலைமையில் நெடுஞ்சாலை துறையினர் 10-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம்மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கடையில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் அதிகாரிகளை ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பல்வேறு கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடை ஊழியரை கண்டித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவி செய்தனர்.
இது குறித்து பள்ளி கொண்டா போலீஸ் நிலையத்தில் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் புகார் கொடுத்துள்ளார். இனி இதுபோன்று ஆக்கிரமிப்புகள் செய்தால் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.