தேனியில் மேம்பாலம் கட்டுவதற்கு ஆக்கிரமிப்புகள் அகற்றம்:அடுக்குமாடி குடியிருப்பு வேண்டாம்; வாழ்வதற்கு மாற்று இடமே தேவை!பொதுமக்கள் வலியுறுத்தல்


தேனியில் மேம்பாலம் கட்டுவதற்கு ஆக்கிரமிப்புகள் அகற்றம்:அடுக்குமாடி குடியிருப்பு வேண்டாம்; வாழ்வதற்கு மாற்று இடமே தேவை!பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் மேம்பாலம் கட்டுவதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வரும் நிலையில், தங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வேண்டாம் என்றும், மாற்று இடமே வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தேனி

மனிதர்களுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, வசிக்க வீடு இவை மூன்றும் அத்தியாவசிய தேவை.

இதில், வீடு என்பதில் பலருக்கும் பலவித கனவு இருக்கும். பணம் இருப்பவர்கள் தங்கள் விரும்பிய கனவு இல்லத்தை கட்டிக் கொள்கின்றனர். அன்றாட பிழைப்புக்கே வழியில்லாமல், சொந்த நிலமில்லாத மக்கள் அரசு புறம்போக்கு நிலங்களில் குடியேறி வசித்து வருகின்றனர்.

60 ஆண்டுகளாக வசிக்கும் மக்கள்

அந்த வகையில் தேனி பங்களாமேடு மதுரை சாலையில் 60 ஆண்டுகளுக்கும் மேல் ஏழை, எளிய மக்கள் வசித்து வருகின்றனர். சாலையோரம் உள்ள புறம்போக்கு நிலம் என்பதால் அவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. பல ஆண்டுகளாக பட்டா கேட்டும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

அந்த மக்கள் அங்கு வசிக்கத் தொடங்கியபோது தேனி நகர் கிராமத்தின் சாயலில் இருந்தது. கடந்த 60 ஆண்டுகளில் தேனி நகரின் குடியிருப்பு வளர்ச்சி பன்மடங்கு பெருகி இருக்கிறது. போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது. தேனிக்கு ரெயில் வரும் நேரங்களில் மதுரை சாலை, பெரியகுளம் சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதிகளில் வாகன நெரிசல் அதிக அளவில் ஏற்படுகிறது. இதனால், தேனிக்கு ரெயில்வே பாலம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. நகரின் வளர்ச்சிக்கும் அந்த பாலம் தேவையாகவே உள்ளது.

நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ்

இதையடுத்து மதுரை சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பாலம் அமைக்கும் பணிக்காக பங்களாமேடு மதுரை சாலையோரம் உள்ள 45 வீடுகள், 37 கடைகள் என 82 கட்டிடங்களை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதற்கு முன்பு பலமுறை வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் கொடுக்கப்பட்ட போதிலும், மாற்று இடம் கொடுப்பதில் ஏற்பட்ட தொய்வால் வீடுகள் அகற்றப்படவில்லை. ஆனால், இந்த முறை ரெயில்வே பாலம் அமைக்கும் பணி கண்முன்னே நடப்பதால் வீடுகள் பறிபோகும் என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டது. தங்களுக்கு மாற்று இடம் கொடுக்குமாறு மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்களுக்கான மாற்று இடமாக வடவீரநாயக்கன்பட்டியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வந்தது. அதற்கு பங்களிப்புத் தொகையாக ஒவ்வொரு குடும்பத்தினரும் சுமார் ரூ.2.5 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. தாங்கள் இருக்கும் நிலையில் பங்களிப்புத் தொகை செலுத்த முடியாது என்ற இயலாமையை மக்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில் தங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புக்கு பதில் மாற்று இடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அந்த மக்கள் தொடர்ந்து முன்வைத்து இருக்கின்றனர்.

கட்டிடங்கள் தரைமட்டம்

இந்நிலையில் கடந்த 14-ந்தேதி வீடுகள், கடைகளை அகற்ற அதிகாரிகள் குழுவினர் போலீஸ் பாதுகாப்புடன் மதுரை சாலைக்கு வந்தனர். வீடுகளை இடிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடைகளை மட்டும் தற்போது இடிக்கப் போவதாகவும், மாற்று இடம் கொடுத்த பிறகு வீடுகளை இடிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்பிறகு சாலையோரம் இருந்த கடைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. அதே வேகத்தில் வீடுகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகளும் ஒரே நாளில் துண்டிக்கப்பட்டது. ஆனால், இதுவரை மாற்று இடம் கிடைக்கவில்லை. பகல் மற்றும் இரவு முழுவதும் கொசுக்கடியில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனால், தோல் நோய் பாதிப்புகளும் சிலருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

தரமற்ற குடியிருப்பு வேண்டாம்

மதுரை சாலையை சேர்ந்த ராதா கூறும்போது, 'என்னுடைய தாத்தா, பாட்டி காலத்தில் இருந்தே இங்கு தான் வசிக்கிறோம். எனக்கு 39 வயதாகிறது. நான் பிறந்து வளர்ந்தது இங்கு தான். புளி தட்டும் கூலித்தொழில் செய்து வருகிறோம். அதில் கிடைக்கும் வருமானத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். பல ஆண்டுகளாக எங்களை வெளியேற்ற முயற்சி நடந்தது. நகரின் வளர்ச்சிக்கு நாங்கள் தடையாக இருப்பதாக யாரும் கருத வேண்டாம். மாற்று இடம் கொடுத்தால் நாங்கள் நிம்மதியாக அங்கே செல்வோம். தேனியில் தான் எங்களின் வாழ்வாதாரம் இருக்கிறது.

எனவே, தேனி அருகில் மாற்று இடம் வேண்டும் என்று கேட்கிறோம். ஆனால், வடவீரநாயக்கன்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு தருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த குடியிருப்பை சென்று பார்த்து வந்தோம். அவை தரமற்ற வகையில் கட்டப்பட்டுள்ளது. சுவரை தொட்டால் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து வருகிறது. எத்தனையோ இடங்களில் அடுக்குமாடி வீடுகள் இடிந்து விழுவதை பார்க்கும் போது அந்த குடியிருப்புக்கு செல்ல அச்சமாக உள்ளது. எனவே எங்களுக்கு மாற்று இடம் கொடுத்தால் அதில் பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்டிக் கொள்ளலாம்' என்றார்.

மாற்று இடம் வேண்டும்

மதுரை சாலையை சேர்ந்த ஜெயந்தி கூறும்போது, 'இந்த வீடுகளுக்கு மின் இணைப்பு வாங்கி இருக்கிறோம். வீட்டு வரி செலுத்தி வந்தோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுவரி வசூல் செய்வதை நிறுத்திக் கொண்டனர். வீடுகளுக்கு குடிநீர் இணைப்பும் இல்லை. பொதுவான குடிநீர் இணைப்பு இருந்தது. அதில் இருந்து தண்ணீர் பிடித்து பயன்படுத்தினோம். அதற்கான குடிநீர் தொட்டியையும் அகற்றிவிட்டனர். எங்களின் வாழ்வாதாரம் தேனிக்குள் தான் இருக்கிறது. மாற்று இடம் கொடுக்கும் முன்பு வீடுகளை இடிக்க மாட்டோம் என்றார்கள். ஆனால், மின் இணைப்பை துண்டித்து விட்டார்கள். இரவில் தூங்க முடியவில்லை. குழந்தைகள் அழுகிறார்கள். கொசுக்கடியால் தோலில் அலர்ஜி பாதிப்புகள் ஏற்படுகின்றன. தாமதமின்றி மாற்று இடம் கொடுக்க வேண்டும்' என்றார்.

20 ஆண்டுகளாக போராட்டம்

தேனியை சேர்ந்த மணிகண்டன் கூறும்போது, 'இங்கு மக்கள் பல தலைமுறையாக வசிக்கிறார்கள். வீடுகள் மட்டுமின்றி சிறு, சிறு கடைகளும் இருந்தன. நானும் இங்கு தான் வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் அலுவலகம் நடத்தி வந்தேன். அதுபோன்று மற்றவர்கள் 6 அலுவலகம் நடத்தி வந்தனர். 8 சிறிய ஒர்க்்ஷாப் இருந்தன. அவை அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொழில் செய்தவர்கள் தேனியில் வேறு இடம் வாடகைக்கு சென்றால் குறைந்தது ரூ.50 ஆயிரம் முன்பணம் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தாலும் நகருக்குள் கடைகள் கிடைப்பது இல்லை. இந்த கடைகளை நம்பி வாழ்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பறிபோய்விட்டது' என்றார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் தர்மர் கூறும்போது, 'இங்குள்ள வீடுகளை காலிசெய்யுமாறு 2002-ம் ஆண்டு ரெயில்வே துறையில் இருந்து நோட்டீஸ் வந்தது. அதே இடத்தை காலி செய்யுமாறு தற்போது நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் கொடுத்து கட்டிடங்களை இடித்து வருகின்றனர். மக்கள் வசிக்கும் இடம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானதா? ரெயில்வே துறைக்கு சொந்தமானதா? என்று கூட அதிகாரிகள் தெளிவுப்படுத்த மறுக்கிறார்கள். நெடுஞ்சாலைத்துறை ஏற்கனவே அளவீடு செய்த இடத்தையும் தாண்டியுள்ள கட்டிடங்களும் இடிக்கப்பட்டுள்ளன.

20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மக்கள் மாற்று இடம் கேட்டு போராடி வருகின்றனர். இதுவரை மாற்று இடம் கிடைக்கவில்லை. தற்போது மாற்று இடம் பார்த்துக் கொண்டு இருப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். நகருக்குள் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் தான் மாற்று இடம் கொடுக்க அரசாணை உள்ளது. அவ்வாறு கொடுக்கும் இடம் மக்கள் போக்குவரத்துக்கு ஏதுவாக இருக்க வேண்டும்' என்றார்.

இடம் தேர்வு செய்யும் பணி

இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் தயார் நிலையில் உள்ளன. அதற்கான பங்களிப்புத் தொகையை மொத்தமாக செலுத்த முடியாது என்று மக்கள் கூறுவதால், தவணை முறையில் செலுத்தவும் குடிசை மாற்று வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், மக்கள் மாற்று இடம் தான் வேண்டும் என்கிறார்கள். மாற்று இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. மாவட்ட கலெக்டர் வழிகாட்டுதல்படி விரைவில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்' என்றனர்.


Related Tags :
Next Story