ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 17 July 2023 12:15 AM IST (Updated: 17 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பிடாரியம்மன் கோவில் தெருவில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை, திரவுபதியம்மன் கோவில் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து சுமார் 10-க்கும் மேற்பட்ட கடைகளை கட்டி பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி திருக்கோவிலூர் நகராட்சி ஆணையாளர் கீதா, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் திவாகரன், ஆய்வாளர் பாக்கியலட்சுமி, செயல் அலுவலர் அருள் மற்றும் அதிகாரிகள் அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்ற முடிவு செய்தனர். அதன்படி அந்த கடைகளை அகற்றும் பணியில் நேற்று அதிகாரிகள் ஈடுபட்டனர். அதற்கு ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார், இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் தலைமையிலான போலீசார், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆக்கிரமிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோர்ட்டு உத்தரவுப்படி தான் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. எனவே அனைவரும் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் தெரிவித்தனர். அதனை ஏற்று ஆக்கிரமிப்பாளர்கள் அங்கிருந்து சென்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், திருக்கோவிலூரில் கோவிலுக்கு சொந்தமான இடங்களை இன்னும் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினால் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்க முடியும் என்றனர்.


Next Story