சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆங்கிலேயர் கல்லறை தோட்டத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆங்கிலேயர் கல்லறை தோட்டத்தில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அதிகாரிகள் அகற்றினர்.
சேலம்,
கல்லறை தோட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆங்கிலேயர் கல்லறை தோட்டம் உள்ளது. இந்த கல்லறை தோட்டத்தின் வளாகத்தில் கோட்டை சி.எஸ்.ஐ. ஆலயத்தில் பணியாற்றி வந்தவர்களின் மகன், மகள் என 6 குடும்பத்தினர் வசித்து வந்தனர்.
ஆனால் அவர்களது குடியிருப்புகள் கல்லறை தோட்டத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி சி.எஸ்.ஐ.ஆலயம் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிடப்பட்டது.
வீடுகள் ஒதுக்கீடு
இதையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதற்கு அங்கு குடியிருந்த 6 குடும்பத்தினரும் தங்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், கலெக்டர் கார்மேகம் உத்தரவின்படி உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, அவர்களது மனுக்களை ஆய்வு செய்து ஓமலூர் அருகே கோட்டகவுண்டம்பட்டி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 6 வீடுகளை ஒதுக்கீடு செய்தார். மேலும், வீடுகள் ஒதுக்கீட்டிற்கான ஆணையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
இந்த நிலையில், ஆங்கிலேயர் கல்லறை தோட்டத்தில் உள்ள 6 ஆக்கிரமிப்பு வீடுகளையும் இடித்து அப்புறப்படுத்தும் பணி நேற்று நடந்தது. சேலம் டவுன் தாசில்தார் செம்மலை, மாநகராட்சி செயற்பொறியாளர் பழனிசாமி, உதவி செயற்பொறியாளர் தமிழ்செல்வன், வருவாய் ஆய்வாளர் பாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் ஆகியோர் டவுன் போலீசாரின் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அதன்பிறகு அதிகாரிகள் முன்னிலையில் கல்லறை தோட்டத்திற்குள் யாரும் நுழையாத வகையில் வாசலுக்கு பூட்டு போடப்பட்டது.