சினிமா படப்பிடிப்புக்கான தடை நீக்கம்
கோடை சீசன் முடிவடைந்ததால் நீலகிரியில் உள்ள தோட்டக்கலை பூங்காக்களில் சினிமா படப்பிடிப்பு நடத்த விதிக்கப்பட்டு இருந்த தடை நீங்கியது.
ஊட்டி
கோடை சீசன் முடிவடைந்ததால் நீலகிரியில் உள்ள தோட்டக்கலை பூங்காக்களில் சினிமா படப்பிடிப்பு நடத்த விதிக்கப்பட்டு இருந்த தடை நீங்கியது.
கோடை சீசன்
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள், பசுமையான புல்வெளிகள், இயற்கை எழில் மிகுந்த மலைப்பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு நடப்பது வழக்கம். இயற்கை காட்சிகள், மலைகளை மோதி செல்லும் மேகக்கூட்டம் போன்றவற்றின் பின்னணியில் காட்சி எடுக்கப்படுகிறது. தமிழ் மட்டுமின்றி பிற மொழி திரைப்படங்களும் ஊட்டியில் படமாக்கப்படுகிறது.
நீலகிரியில் தோட்டக்கலைத்துறையின் கீழ் உள்ள பூங்காக்களில் கட்டணம் அடிப்படையில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. மே மாதத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி மலர் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதை கண்டு ரசிக்க வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர்.
தடை நீக்கம்
இதனால் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவும், சுற்றுலா தலங்களில் கண்காட்சி பணிகள் நடைபெற்றதால் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்பட தோட்டகலைத்துறைக்கு சொந்தமான 7 முக்கிய சுற்றுலா தலங்களிலும் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது.
கோடை விழாவில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி, காய்கறி கண்காட்சி நடைபெற்றது. அனைத்து இடங்களிலும் சீசன் சமயத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக அலைமோதியது. கோடை சீசனில் நீலகிரிக்கு 8½ லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். கோடை சீசன் நிறைவடைந்ததால் சினிமா படப்பிடிப்பிற்கான தடை நேற்று முதல் நீக்கப்பட்டு உள்ளது. மேலும் தோட்டகலைத்துறைக்கு சொந்தமான பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி பெற தோட்டக்கலை அலுவலகத்தை அனுகலாம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.