ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
x

திருச்செங்கோடு பவுர்ணமி கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அகற்றினர்.

நாமக்கல்

எலச்சிபாளையம்

திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்வது வழக்கம். அவ்வாறு பக்தர்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல சாலையின் ஒரு புறமாக நடைபாதை அமைக்கப்பட்டது. இந்த நடைபாதையில் அந்த பகுதிகளில் உள்ள கடைக்காரர்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதும், சிலர் தள்ளுவண்டி கடைகள் போட்டு நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். இதனால் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், இதனை முழுமையாக அகற்றி தர வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கைகள் விடுத்தனர். இதையடுத்து அந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர். பின்னர் மீண்டும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வழக்கம்போல் நடைபாதையில் வாகனங்களை நிறுத்தியும், விளம்பர தட்டிகளை வைத்தும் ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாக நகராட்சி ஆணையாளர் கணேசனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் துப்புரவு அலுவலர் வெங்கடாசலம் தலைமையில், துப்புரவு ஆய்வாளர் குமரவேல் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் வாலரை கேட் பகுதியில் இருந்து டி.சி.எம்.எஸ். வரை உள்ள நடைபாதையின் நடுவில் வைத்திருந்த விளம்பர தட்டிகள், தள்ளுவண்டி கடைகளை அகற்றினர். மேலும் கிரிவலம் செல்லும் பவுர்ணமி நாளில் கிரிவலப் பாதையில் எந்த இடையூறும் இருக்கக்கூடாது. அப்படி ஏதேனும் இருந்தால் கட்டாயமாக அகற்றப்படும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி பணியாளர்கள் எச்சரித்தனர்.


Next Story