ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம்


ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம்
x

குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பேபி தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) தேவேந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் பேபி காணொலிக்காட்சி வாயிலாக கூட்டம் இருப்பதாக கூறிவிட்டு வெளியே சென்றார். இந்தநிலையில் மாவட்ட கலெக்டரும், வருவாய் அலுவலரும் கூட்டத்தில் இல்லாததால் ஆத்திரமடைந்த விவசாயிகளின் ஒரு பிரிவினர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் பேபி மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றார். இதில் விவசாயிகள் கலந்துகொண்டு பேசினர். இதன் விவரம் வருமாறு:-

ரூ.30ஆயிரம் நிவாரணம்

காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கமல்ராம்: குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தலைஞாயிறு பகுதிக்கு பாகுபாடின்றி உரிய முறையில் தண்ணீரை பகிர்ந்து வழங்க வேண்டும். தலைஞாயிறு பேரூராட்சி பகுதிகளுக்கு தோட்டக்கலைத்துறை திட்டங்களை முறையாக செயல்படுத்தபடவேண்டும்.

நாகை மாவட்ட வேளாண் உற்பத்தியாளர் குழு உறுப்பினர் பாஸ்கரன்:

கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் தடை செய்யப்பட்ட மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனங்களை தமிழ்நாட்டிலும் தடை செய்ய வேண்டும்.

டீசல் மானியம் வழங்க வேண்டும்

விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன்:

குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். 2022-23-ம் ஆண்டுக்கான உளுந்து, நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்த அனைவருக்கும் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணை பொதுச்செயலாளர் பிரகாஷ்: என்ஜினை கொண்டு தண்ணீரை பாய்ச்சி கருகும் பயிர்களை காப்பாற்றி வரும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.7000 டீசல் மானியம் வழங்க வேண்டும்.

விவசாயிகள் சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் சம்பந்தம்:

சுப்ரீம் கோர்ட்டு அடிப்படையில் காவிரியில் இருந்து உரிய தண்ணீரை தமிழகத்திற்கு பெற்று தர வேண்டும். மீனவர்களுக்கு வழங்குவது போல விவசாயிகளுக்கும் டீசல் மானியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.


Next Story