பயிர் அழிவால் பாதிக்கப்படும் குறுவை விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் - முத்தரசன்


பயிர் அழிவால் பாதிக்கப்படும் குறுவை விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் - முத்தரசன்
x

விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தை மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

சென்னை,

பயிர் அழிவால் பாதிக்கப்படும் குறுவை விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு இறுதித் தீர்ப்பின்படி ஜூன் முதல் ஆகஸ்ட் 10 வரை கர்நாடகம் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய 38 டி.எம்.சி. நீர் நிலுவையில் உள்ளது. அதை தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வாய்ப்பில்லை என 11.8.2023 அன்று டெல்லியில் நடந்த காவேரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடக அரசு கூறியிருப்பது கண்டனத்துக்குரியதாகும். இது இந்திய அரசியல் சட்டநெறிமுறைகளை மீறுகிற செயலாகும்.

கர்நாடக அணைகளின் மொத்தக் கொள்ளளவில் சுமார் 80% தண்ணீர் இருப்பில் இருந்தும் திறந்துவிட மறுத்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பைகொண்டு சில நாட்களுக்குதான் தண்ணீர் திறக்கமுடியும். கர்நாடகத்தில் தென்மேற்கு பருவ மழை மூலம் ஆகஸ்ட் இறுதியில் பெருமளவு நீர் கிடைக்கும் என வானிலை ஆய்வு கூறுகிறது.

மேட்டூர் அணை நீரை எதிர்பார்த்து, காவிரிப் படுகையில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது தண்ணீரின்றி, அந்தப் பயிர்கள் காய்ந்து கருகுகின்றன. தண்ணீர் தேவைப்படும் நேரத்தில், தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் தர மறுப்பது நியாயமற்றதாகும்.

முதல் நாள் நடந்த கண்காணிப்பு குழு கூட்டத்தில் 25 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட ஒப்புதல் அளித்த கர்நாடக அரசின் நீர்வளத்துறை உயர்அலுவலர்கள், மறுநாள் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இதை ஒப்புக்கொள்ள மறுத்தனர். வேறுவழியின்றி தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வெளியேறி உள்ளனர். பின்னர் 15 நாட்களில் 8 டி.எம்.சி. மட்டும் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்நாள் முடிவை மாற்றி ஆணைய கூட்டத்தில் கர்நாடக அலுவலர்கள் கூறியுள்ளனர். 38 டிஎம்சிக்கு பதிலாக 8 டிஎம்சி தருவது தமிழ்நாட்டின் விவசாயத்துக்கு உதவாது. தண்ணீர் தரப்பட்டது போன்ற பொய்த் தோற்றத்தை ஏற்படுத்தவே கர்நாடக அரசு முயல்கிறது.

கர்நாடக முதல்வரும் தமிழகத்திற்குத் தண்ணீர் தர வாய்ப்பில்லை என நேற்று உறுதியாகக் கூறியிருக்கிறார். பற்றாக்குறை நேரத்தில், மாநிலங்களுக்கிடையே தண்ணீர் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்ற கோட்பாட்டையே மறுத்து, தண்ணீரை இதற்கு மேலும் தேக்கினால் ஆபத்து எனும் நிலையில் தமிழ்நாட்டை வடிகாலாக மட்டுமே பயன்படுத்த கர்நாடக அரசு கருதுகிறது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசிடம் அறிவுறுத்த வேண்டிய மத்திய அரசு, பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மோதிக் கொள்ளட்டும் என வேடிக்கை பார்ப்பது அதன் கடமையிலிருந்து தவறும் நெறியற்ற போக்காகும். இது இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரானதாகும். கர்நாடகம் தண்ணீர் கொடுக்கவில்லை எனில் குறுவை மட்டும் அல்ல, சம்பா, தாளடி சாகுபடிக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்து, உரிய அளவு தண்ணீரைப் பெறுவதற்கான அவசர நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என மாநில அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது. பயிர் அழிவால் பாதிக்கப்படும் குறுவை விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது.

விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தை மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story