மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரணம்: வங்கிக்கணக்கில் தலா ரூ.5 ஆயிரம் வரவு வைக்கும் பணி தொடக்கம்


மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரணம்: வங்கிக்கணக்கில் தலா ரூ.5 ஆயிரம் வரவு வைக்கும் பணி தொடக்கம்
x

மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரண தொகையாக ரூ.5 ஆயிரத்தை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் பணிகள் தொடங்கி இருக்கின்றன.

சென்னை

மீன்பிடி தடைகாலத்தில் மீனவ குடும்பங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைகால நிவாரண தொகை நிர்ணயிக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு மீன்பிடி தடைகால முடிந்த நிலையில், அவர்களுக்கான நிவாரண தொகை வழங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், மீனவ குடும்பங்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடல் மீன்வளத்தை பேணிக்காத்திட, தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15-ந்தேதி தொடங்கி ஜூன் 14-ந்தேதி வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1-ந்தேதி தொடங்கி ஜூலை 31-ந்தேதி வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

மீன்பிடி தடைகாலத்தின் போது மீன்பிடி விசைப்படகுகள், இழுவலைப்படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீனவர்கள் தங்களது குடும்பத்தினை சிரமமின்றி நடத்திச் செல்ல குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மீன்பிடி தடைகால நிவாரணம் வழங்கப்படுகிறது.

நடப்பாண்டுக்கான (2023) மீன்பிடி தடைகாலத்தில் தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 79 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரண தொகை ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கிடும் பொருட்டு ரூ.89 கோடியே 50 லட்சம் அரசு நிதி ஒப்பளிப்பு வழங்கி ஆணையிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 14 கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைகால நிவாரண தொகை 26-ந்தேதி (நேற்று) முதல் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைத்திடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story