வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காக்க 190 இடங்களில் நிவாரண மையங்கள்


வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காக்க 190 இடங்களில் நிவாரண மையங்கள்
x

வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காக்க 190 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என கலெக்டர் அனிஷ்சேகர் கூறினார்.

மதுரை

வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காக்க 190 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என கலெக்டர் அனிஷ்சேகர் கூறினார்.

பாதுகாப்பு ஒத்திகை

மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்களின் அறிவுறுத்தலின்படி மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வெள்ளப்பெருக்கு தொடர்பான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகை நடத்தப்பட்டன. அதன்படி வாடிப்பட்டி தாலுகாவில் மேலக்கால் வைகை ஆற்றுப்பகுதி, மேற்கு தாலுகாவில் துவரிமான் வைகை ஆற்றுப்பகுதி, வடக்கு தாலுகாவில் மீனாட்சி கல்லூரி அருகே உள்ள வைகை ஆற்றுப்பகுதி, தெற்கு தாலுகாவில் தெப்பக்குளம், திருப்பரங்குன்றம் தாலுகாவில் தென்கால் கண்மாய் ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டன. இந்த பணியில் 5 துணை கலெக்டர்கள் தலைமையில் ஒவ்வொரு இடத்திலும் 50-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

190 நிவாரண மையங்கள்

மதுரை மாவட்டத்தில் வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை தங்க வைக்க ஏதுவாக 190 தற்காலிக நிவாரண மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. வைகை அணை முழுக்கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் 50 சதவீதம் முழுக் கொள்ளளவையும், 25 சதவீத நீர்நிலைகள் 75 சதவீதம் கொள்ளளவையும் எட்டியுள்ளன. மீதமுள்ள நீர்நிலைகளில் 50 சதவீதத்திற்கும் குறைவாக நீர்நிரம்பி உள்ளன. நீர் நிலைகளை தொடர்ந்து கண்காணித்திடவும், நீர் நிலைகளில் உடைப்பு ஏற்படாத வகையில் கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறை

வைகை கரையோரங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. வைகை கரையோரம் எளிதில் நீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளாக 27 இடங்கள் கண்டறியப்பட்டு சூழலுக்கேற்ப பொதுமக்களை மீட்டு அருகே உள்ள நிவாரண மையங்களில் தங்க வைப்பதற்கு அலுவலர் குழுக்கள் தயார்நிலையில் உள்ளன.

வைகை ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் ஆற்றில் இறங்குவதை பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும். அதனை கண்காணித்திட அலுவலர் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. பருவமழை காலங்களில் பரவும் வைரஸ் காய்ச்சல் நோய் பரவலை தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பேரிடர் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் சிரமமின்றி தெரிந்துகொள்வதற்கும், புகார்கள் தெரிவிப்பதற்கும் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரம் தொடர்ந்து செயல்படும் கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கலெக்டர் மீனாட்சி கல்லூரி அருகே உள்ள வைகை ஆற்றில் மேற்கொள்ளப்பட்ட பேரிடர் முன்னெச்சரிக்கை மாதிரி ஒத்திகை நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story