தூய்மை பணியாளர் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை
கள்ளக்குறிச்சியில் தூய்மை பணியாளர் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் தூய்மை பணியாளர் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சங்கராபுரம் தாலுகா மையனூர் கிராமத்தை சேர்ந்த தேவராஜ் மனைவி கொளஞ்சி என்ற தூய்மை பணியாளர் கடந்த 12.4.2023 அன்று பணியின்போது விபத்தில் இறந்து விட்டார். இவரது குடும்பத்தினருக்கு தாட்கோ மூலமாக இறப்பு நிவாரண தொகை ரூ.5 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 60 தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் தூய்மை பணியாளர் நலவாரியத்தின் நன்மைகள், பயன்கள் குறித்து தூய்மை காவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர் நலவாரிய மாநில உறுப்பினர் கண்ணன், மாவட்ட தாட்கோ மேலாளர் (பொறுப்பு) தாட்சாயணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.