அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு:வாய்க்கால் சீரமைக்கப்படாததால் தரிசாய் கிடக்கும் வயல்கள்
மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டும் வாய்க்கால் சீரமைக்கப்படாததால் வயல்கள் தரிசாய் கிடக்கின்றன.
தேவதானப்பட்டியில் மஞ்சளாறு அணை உள்ளது. இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 5 ஆயிரத்து 249 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் தேனி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 249 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 15-ந்தேதி மஞ்சளாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் புது வாய்க்கால் வழியாக செல்லும். இந்த வாய்க்காலில் 13 மடைகள் உள்ளன.
இதற்கிடையே அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் வாய்க்கால் சேதமடைந்ததால் தண்ணீர் சரியாக வரவில்லை. இதையடுத்து சேதமடைந்த வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்ைக விடுத்தனர். இதையடுத்து 12-வது மடை வரை வாய்க்கால் சீரமைக்கப்பட்டது. 13-வது மடை பகுதியில் சுமார் 900 ஏக்கரில் பாசன வயல்கள் உள்ளன. இந்த மடை சீரமைக்கப்படாததால் வாய்க்காலில் தண்ணீா் செல்லவில்லை. இதன் காரணமாக நெல் சாகுபடி செய்ய முடியாமல் வயல்கள் தரிசாக கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே சேதமடைந்த வாய்க்காலை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.