திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் சுற்றுப்பயண விபரம் வெளியீடு
மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை உருவாகும் என கனிமொழி எம்.பி தெரிவித்து இருந்தார்.
சென்னை,
அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் தொடங்கிய கூட்டத்தில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், டிஆர்பி ராஜா, எம்எல்ஏக்கள் எழிலரசன், எழிலன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன் பின்னர் பேசிய கனிமொழி எம்.பி, "தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள பொது மக்கள், தொழிலாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்க உள்ளோம். மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை உருவாகும்." என்றார்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் வழங்கிய அறிவுரையின்படி, நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கீழ்கண்ட பகுதிக்கு பயணம் மேற்கொண்டு, தொழிற்துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியலாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரடியாக சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை பெறுவார்கள் என அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அடுத்த மாதம் 5-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தஞ்சாவூர், சேலம், கோவை, திருப்பூர், ஓசூர், வேலூர், ஆரணி, விழுப்புரம், சென்னை ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.