விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மறியல்


விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மறியல்
x

விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

கார் மோதி சாவு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் காந்தி நகரை சேர்ந்தவர் அங்கமுத்து. இவர் அங்குள்ள மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 7-ந் தேதி இறந்த தனது மாமனார் உடலை அடக்கம் செய்துவிட்டு, காந்தி நகர் அருகே சாலையில் நடந்து வந்தார்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார், அங்கமுத்து மீது மோதிவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த அங்கமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறியல்

இந்நிலையில் நேற்று அங்கமுத்துவின் உறவினர்கள் உள்பட ஏராளமானவர்கள் ஒன்று திரண்டு காந்திநகர் ரேஷன் கடை அருகே பில்லங்குளம்- வேப்பந்தட்டை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அப்போது காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியவர் யார்? என்பதை கண்டறிந்து, அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், வேப்பந்தட்டை தாசில்தார் துரைராஜ் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காரை ஓட்டி வந்தவரை விரைவில் கண்டுபிடித்து கைது செய்வதாக உறுதி அளித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் பில்லங்குளம்- வேப்பந்தட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story