காதலனை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்
வத்தலக்குண்டுவில் பெண் என்ஜினீயர் தற்கொலை சம்பவம் தொடர்பாக காதலனை கைது செய்யக்கோரி பெண்ணின் உறவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வத்தலக்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. அவருடைய மகள் பிரபா (வயது 28). என்ஜினீயர். அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் சதீஷ்குமார் (28). இவர், வடுகபட்டியில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரும், பிரபாவும் பழைய வத்தலக்குண்டுவில் ஒரே பள்ளியில் படித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சதீஷ்குமாருக்கு வேறு இடத்தில் பெண் பார்க்க தொடங்கினர். இதையறிந்த பிரபா, சதீஷ்குமாரிடம் கேட்டார். அதற்கு அவர் பதில் ஏதும் கூறவில்லை என தெரிகிறது. இதையடுத்து வத்தலக்குண்டு போலீஸ்நிலையத்தில் சதீஷ்குமார் மீது பிரபா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சதீஷ்குமாரிடம் விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 8-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது பிரபா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே சதீஷ்குமாரை கைது செய்ய வேண்டும் என்று பிரபாவின் உறவினர்கள் வத்தலக்குண்டு போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.
பின்னர் அவர்கள் வத்தலக்குண்டு-பெரியகுளம் சாலையில் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சதீஷ்குமாரை கைது செய்ததாக போலீசார் கூறினார். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.