திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் மறியல்
வாகனம் மோதி தொழிலாளி இறந்ததால் அதிருப்தி அடைந்த அவரது உறவினர்கள் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொழிலாளி பலி
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அடுத்துள்ள கோரைக்குழி பகுதியை சேர்ந்தவர் வடிவுக்கரசன் (வயது 32), கூலி தொழிலாளி. இவர், கடந்த மாதம் 29-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வி.கைகாட்டி அருகே தேளூர் துணை மின் நிலையம் முன்பு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார்.
பின்னர் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி வடிவுக்கரசன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
சாலை மறியல்
இதையடுத்து, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடித்து தரக்கோரி வடிவுக்கரசனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கயர்லாபாத் போலீஸ் நிலையம் முன்பு திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து கயர்லாபாத் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் கணேஷ் உத்தரவின் பேரில் மறியலில் ஈடுபட்டவர 20 பேரை கைது செய்து அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.