பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் மறியல்


பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் மறியல்
x

பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

அறந்தாங்கி:

பிரசவத்திற்காக அனுமதி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள கூத்தாடிவயல் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி(வயது 26). இந்த தம்பதிக்கு வைஷ்ணவி(4) என்ற மகள் இருக்கிறாள்.

இந்நிலையில் ராஜலட்சுமி மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை பிரசவத்திற்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ராஜலட்சுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின்னர் ராஜலட்சுமிக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததாக தெரிகிறது.

மறியல்

இதையடுத்து டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் ராஜலட்சுமியின் கர்ப்பப்பையை அகற்றி உள்ளனர். பின்னர் ராஜலட்சுமியின் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று ராஜலட்சுமியின் உறவினர்கள் அறந்தாங்கி அரசு மருத்துவமனை முன் திரண்டனர். அவர்கள், ராஜலட்சுமிக்கு பிரசவத்தின்போது தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது என்று கூறி மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர்.

பணியிட மாற்றம்

இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட சுகாதாரத்துறை உதவி இயக்குனர் ராமு, ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி, தாசில்தார் பாலகிருஷ்ணன், அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ராஜலட்சுமிக்கு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது சிகிச்சை அளித்த டாக்டர் சாரதாவை கந்தர்வகோட்டைக்கும், செவிலியர் பரமேஸ்வரி, உதவி செவிலியர் முத்துலெட்சுமி ஆகியோரை புதுக்கோட்டை முத்துலெட்சுமி நினைவு மருத்துவமனைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக, சுகாதாரத்துறை உதவி இயக்குனர் ராமு தெரிவித்தார்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story