இறைச்சி வியாபாரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
தேவதானப்பட்டி அருகே கொலை செய்யப்பட்ட இறைச்சி வியாபாரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இறைச்சி வியாபாரி
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது 26). இறைச்சி விற்பனை கடை நடத்தி வந்தார். இவரது நண்பர், அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார் (32). இவருக்கு ஓட்டணைக்கு அருகே தென்னந்தோப்பு உள்ளது.
நேற்று முன்தினம் பசு மாட்டை வீட்டுக்கு கொண்டு வருவதற்காக அந்த தென்னந்தோப்புக்கு ஜெகதீஸ்வரனும், வினோத்குமாரும் நடந்து சென்றனர். அங்கு அணைக்கு அருகில் ஜி.கல்லுபட்டியை சேர்ந்த ரிஷாத்ராஜ் (25), விக்னேஷ் (30), முத்துகுமார், சதீஷ் (25), மணி ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவர்கள் வினோத்குமாரை மது அருந்த அழைத்ததாக தெரிகிறது. அவர் குடிக்க மறுத்தார். இதனால் வினோத்குமாரை தரக்குறைவாக ரிஷாத்ராஜ் பேசினார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்பின்பு ரிஷாத்ராஜ் மற்றும் அவருடன் வந்தவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து ரிஷாத்ராஜ், விக்னேஷ், முத்துக்குமார், சதீஷ், மணி, கிரண்குமார் மற்றும் சிலர் மோட்டார் சைக்கிள்களில் தோப்புக்கு மீண்டும் வந்தனர்.
அரிவாளால் வெட்டி கொலை
இந்தநிலையில் தோப்பில் இருந்த வினோத்குமாரை, ரிஷாத்ராஜ் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதை தடுக்க முயன்ற ஜெகதீஸ்வரனையும் அவர் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே ஜெகதீஸ்வரன் இறந்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து படுகாயம் அடைந்த வினோத்குமாரை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
பின்னர் ஜெகதீஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை சம்பவம் தொடர்பாக ரிஷாத்ராஜின் தந்தை செல்வம் (40), விக்னேஷ், சதீஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ரிஷாத்ராஜ் மற்றும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
சாலை மறியல்
இதற்கிடையே நேற்று காலையில் கெங்குவார்பட்டியில் ஜெகதீஸ்வரனின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா மற்றும் போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், ரிஷாத்ராஜை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கு போலீசார் விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.