வாகனம் மோதி டிரைவர் பலி: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல்
வாகனம் மோதி டிரைவர் பலியானதை தொடர்ந்து உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல்
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சத்திரப்பட்டியைச் சேர்ந்த சாலமோன் மகன் செல்வராஜ் (வயது 46). இவர் திருவேங்கடத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணி புரிந்து வந்தார். கடந்த 9-ந் தேதி மாலை பணி முடிந்து இரவு 7.45 மணியளவில் மோட்டார்சைக்கிளில் சத்திரப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். குலசேகரன்கோட்டை அருகே சென்றபோது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்கள் கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இந்நிலையில் நேற்று போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி செல்வராஜ் உறவினர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை முன்பு திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அவர்களை அங்கிருந்து அகற்ற முயன்றபோது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நெல்லை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.