ஆம்புலன்ஸ் வராததால் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்


ஆம்புலன்ஸ் வராததால் அரசு மருத்துவமனையை  முற்றுகையிட்ட உறவினர்கள்
x
தினத்தந்தி 26 Sept 2023 1:15 AM IST (Updated: 26 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே விபத்தில் காயம்பட்ட தனியார் நிறுவன ஊழியரை கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் வராததால் அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நாடார் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 22). தனியார் நிறுவன ஊழியர். நேற்று மாலை இவர், எரியோட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேடசந்தூருக்கு சென்று கொண்டிருந்தார். வேடசந்தூர்-வடமதுரை சாலையில் வேடசந்தூர் அருகே உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, எதிரே சரக்கு வாகனம் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பிரகாசை மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்வதற்கு 108 ஆம்புலன்சிற்கு அங்கிருந்தவர்கள் போன் செய்தனர். ஆனால் வேடசந்தூர் ஆஸ்பத்திரியில் 2 ஆம்புலன்ஸ்கள் இருந்தும் டிரைவர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இல்லாததால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மேல் சிகிச்சைக்காக பிரகாசை கொண்டு செல்ல முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த பிரகாஷின் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.

ஆம்புலன்ஸ் வராததால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் அனைவரும் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு தகராறில் ஈடுபட்டனர். பின்னர் 1 மணி நேரத்திற்கு பிறகு எரியோட்டில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வந்தது. இதையடுத்து பிரகாஷ் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் படுகாயமடைந்தவரை மேல்சிகிச்சைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வராததால் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story